அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்
- பாவலர். பஸீல் காரியப்பர்
பாவலர் பஸீல்காரியப்பர் எழுதிய „அழகான ஒரு சோடிக் கண்கள்|“ கவிதை பற்றி அறியாதார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போது அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின் இசையமைப்பில் மெல்லிசை வித்தகர் திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின் மதுரமான குரலில் ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.
இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு „ஒரு சோடிக் கண்கள்“ என்பதாகும். இது 1956ம் ஆண்டு, அவரது மாணவப் பருவத்தில் முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புப் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில் சக மாணவர்களினதும் மற்றும் சில ஆசிரியர்களினதும் குறும்புத்தனமான இரசனைக்குள்ளானார்.
இதன் பிறகு 1966ல், பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போது தன்னுடன் மட்டக்களப்பு தொடக்கம் கொழும்பு வரை பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண் இறங்க எத்தனிக்கும் போது தடுமாறியதையும் அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போது கண்களிரண்டும் இல்லாதிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம் அவருக்கு இந்த „ஒரு சோடிக்கண்கள்“ கவிதை ஞாபகத்தில் வர, ரயிலில் அமர்ந்தபடியே பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்து மறுபடியும் அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்து அதற்கு „கண்ணூறு“ என்று புதுத் தலைப்பிட்டு தினகரன் பத்திரிகைக்கு விடிந்ததும் அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது.
பல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில் உலவிவிட்டு பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில் அறிவிப்பாளர் பாடலைப் பாடியவர் எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர் புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம் தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும் அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை.
அப்பாடல் இயற்றியவர் பெயர் தெரியாமலேயே மேலும் சுமார் பத்து வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
பின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர் பீ.எச். அப்துல்ஹமீது அவர்களின் சொற்களில் காண்போம்.
பஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலா பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது. நானே அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டேன். சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி. "இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை?" கேட்டேன்.
புன் சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார் "எழுதியிருக்கிறேனே! பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே! எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்!"
அவர் சொல்லக் கேட்டதும் என்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.
"பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல். பேட்டி நடந்தது 1978ல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலே இலங்கையிலும் இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது. எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?" என்று கேட்ட போது "நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம். கவிஞன் காணாமல் போய், கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய் இருப்பது ஒரு சுவையான அனுபவம்" என்ற, தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான புகழைக் கூட இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது!
பேட்டி முடிந்ததும் பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன்.
`அழகான ஒரு சோடிக் கண்கள்´ இசைத் தட்டை எடுத்து Lyrics என்ற இடத்தில் பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல் காரியப்பர் என்ற அவரது நாமத்தை நானே எழுதும் நல் விதி பெற்றேன்.
புவியியல் கற்றிடும் வேளை- அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை
தங்குவதெங்கே மனமொரு பாலை
இச்சம்பவத்தின் பின்னர் அழகான ஒரு சோடிக் கண்கள் மேலும் பிரபல்யமாகி இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் பிரபல்யம் பெற்றது.
இப்பாடலையிட்டு மூத்த அறிவிவிப்பாளர் திருமதி. கமலினி செல்வராசன் பின்வருமாறு ஞாபகம் கொள்கிறார்.
எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். என் இள மனதைக் கவர்ந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று அழகான ஒரு சோடிக் கண்கள்.
தத்துவப் பாடம் நடக்கும்- அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.
வித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்
வீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்
என்ற அடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே அந்தப் பாடலின் மெட்டும் வரிகளும் அவ்வப்போது என் மனதில் ஒலிக்கும். எனக்குத் திருமணமான பின் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு மெல்லிய மனிதரை சில்லையூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.
"இவர் பாவலர் பஸீல் காரியப்பர்“ என்று.
"ஓ!. அழகான ஒரு சோடிக் கண்கள்..?“ என்றேன்.
அன்றைய அறிமுகத்தின் பின் அவர் எனக்கு அண்ணா ஆனார். ஒரு பாசமான அண்ணணாக எப்போதும் கதைப்பார். சில்லயூராரும் பஸீல்காரியப்பரும் கதைக்கத் தொடங்கினால் இரவு முழுவதும் கவிதையும் இலக்கியமும்தான். கேட்கக்கேட்க அலுக்காதவை. பாவலர் பட்டமளிப்புக்கு சம்மாந்துறைக்கு சில்லையூராருடன் வந்திருந்தேன். புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை போன்ற மாமேதைகளுடன் என்னையும் பேசச் சொன்னார்கள். பாவலர் என் கணவர் மீது கொண்ட பாசத்தை அவர் தன் கவிதைத் தொகுதியைச் சில்லையூராருக்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து உணர்கிறேன். பஸீல் அண்ணா, இந்த மரிக்கும் உலகுக்கு உயிரையும் உணர்ச்சியையும் தாருங்கள்!
உண்மைதான். பாவலர் மரித்த பின்னர் கூட இப்பாடல் உலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருமையான பாடல் எத்தனையோ இதயங்களை அக்காலத்தில் இணைத்திருக்கின்றது.
இப்பாடலில் மெய்மறந்த பிரபல எழுத்தாளரும் பிரதேசச் செயலாளருமான ஏ.எல்.எம். பளீல் (நற்பிட்டிமுனை பளீல்.) சொல்வது
1966ம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில் க.பொ.த. சாதா. தரத்தைப் படித்துக் கொண்டு சென்ற சகலருமே பாவலர் பஸீல் காரியப்பர் என்ற நாமத்தை உச்சரிக்காமல் விட்டிருக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் தெரிய வந்தது. முதன் முதலாக பஸீல் காரியப்பர் அவர்களின் பெயர் எனக்குத் தெரிய வந்தது அவரது இந்தப் பாடல் ஒன்றின் மூலமே. இப்பாடலின் கருத்துச் செறிவை இரசித்த முதலாவது கணத்தில் இது ஒரு தென்னிந்தியப் பாடலோ என்று எண்ண முடிந்தது. இப்பாடல் ஒலிபரப்பப் படும் போதெல்லாம் அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டு காதுகூர்ந்து கேட்டு இரசிக்கும் நிலைக்கு ஆளானேன். ஒவ்வொரு வரியையும் அணுவணுவாக இரசிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனை யாராவது தட்டச்சு செய்தால் அவரும் இப்பாடலை இசையுடன் முணுமுணுத்திருப்பார். இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மனமும் அப்படியே ஒரு கணம் முணுமுணுக்கும். இப்படிப்பட்ட பாடலை தன் இலக்கிய இரசனையோடு அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் படித்து இரசிக்கும் நிலை.
ஆட்சியியல் மறு பாடம்.-நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்
கலாநிதி. எம்.ஏ. நுஃமான் அவர்கள் இப்பாடல் பற்றிக் கூறுகையில்
அதன் கற்பனையும் உணர்வும் வாலிபத்திற்கே உரியன. நான் ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம் அழகான படிமம்
என்கிறார்.
கல்முனைக்குடி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.எல்.எம். முஸ்தபா தண்டயல் அவர்கள் இப்பாடல் பற்றிக் குறிப்பிடுவது
பாவலரு சேரு இந்தப் பாட்ட அவர்ர சொந்தக் கொரலில கடக்கரயில இரிந்து ஒரத்த சத்தமாப் பாடுவாரு பாருங்க. அந்த ராகத்த அந்த வடிவ அந்தக் கருத்த நெனச்சி நெனச்சி கேட்டுட்டேயிருப்பம். ங்கா வாப்பா..! ச்சா மனிசன் என்னமாக் கட்டி என்னமாப் பாடினாரு.
1966ம் ஆண்டைய அதுவும் ஒரு இலங்கை மெல்லிசைப் பாடலைப் பற்றி 2001ம் ஆண்டு, முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்..? ஆனால் 2001.04.03 இல் தினமுரசு வாரஇதழில் சிந்தியா பதில்கள் பகுதியில் வெளிவந்த ஒரு கேள்வி பதில் இது.
கேள்வி- சிந்தியா காயப்பட்டதுண்டா..?
சுறையா ஸஹீட். மாவனல்லை.
பதில்- அழகான ஒரு சோடிக் கண்கள். அவை அம்புகள் தாக்கி என் உடலெல்லாம் புண்கள்“ பஸீல் காரியப்பரின் பாடல். எஸ்.கே. பராவின் குரலில். அந்த மாதிரியான நம்நாட்டுப் பாடல்கள் இப்போது வருவதில்லையே என்பது மனதிலுள்ள காயம்.
தவிரவும் 2008 மே மாத ஞானம் இதழில் விசுவமடு இந்திரசித்தன் எழுதியுள்ள ஒரு குறிப்பில் பின்வருமாறு உள்ளது.
திரு. அன்புமணி அவர்கள் பாண்டிருப்புக்கு அப்பாலும் சற்று நகர்ந்து இருக்கலாம். இடையிடையே வானொலியில் வந்து போகும் „அழகான ஒருசோடிக் கண்கள்“ என்ற பாடலின் கவிஞர் பஸீல் காரியப்பரையும் மறந்து போனார் போல் தெரிகிறது.
கடற்தொழிலாளி முதல் கலாநிதிகள் வரை சென்றடைந்த இந்தப் பாடல் எழுதிய பாவலரே, நீங்கள் எங்கே..? இரசிகர்களின் கண்ணாறுதான் உங்கள் அழகான ஒரு சோடிக் கண்களை நிரந்தரமாக மூடி விடச் செய்ததா?
தாய்மொழிப் பாடம் நடக்கும்- நறை
தாங்கிய கண்களோ மின்னலடிக்கும்
ஏய்..! என்றென்னைப் பிடிக்கும்- மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்..?(1966)
- நௌசாத் காரியப்பர்
Quelle - http://pavalarfazeelkariapper.blogspot.com/2015/07/09.html