தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்

கணேசானந்தனின் நாவல் அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த யாழினி தன் வேர்க்கலாச்சாரத்தையும் தன் குடும்பத்தைப் பற்றிய சில கசப்பான உண்மைகளையும் தெரிந்துகொள்வது பற்றியது. மறைக்கப்பட்ட, கறைபடிந்த பழைய குடும்ப வரலாறு யாழினிக்கு அவருடைய மாமா குமரன் மூலந்தான் வெளிப்படுகிறது. குமரன் சாதாரண மாமா அல்ல. தமிழ் விடுதலை இயக்கத்தில் முழுசாக ஈடுபட்ட தீவிரவாதி. கொலைகாரனும்கூட. பல தலைமுறைகள் பற்றிய இந்தப் படைப்பில் நிறைய மாமாக்களும் மாமிகளும் சகோதரங்களும் தூரத்து உறவினரும் வருகிறார்கள். கூட்டு ஞாபகத்திலிருக்கும் இலங்கையின் இனப் பிரச்சினையும் வருகிறது. யாழினி, வாணி பாத்திரங்களுக் கூடாகக் கிழக்கு - மேற்குக் கலாச்சார மோதல்களும் உண்டு. பிரிதா சமரசனின் நாவல் Evening Is the Whole Day. மலேசியாவில் வாழும் இன்னுமொரு தமிழ்க் குடியேறிகள் பற்றியது. 80களின் மலேசியாவைப் பின்புலமாகப் கொண்டதான இந்தக் கதை வசதிபடைத்த வழக்கறிஞர் ராஜசேகரன் குடும்பம் பற்றியது. அவருடைய அந்தஸ்துக்குச் சற்றுக் குறைந்த, எதிலும் திருப்தியடையாத மனைவி வசந்தி, இவர்களின் -பருவத்திற்கு முன் அதிகம் பழுத்த - மூன்று பிள்ளைகள் உமா, ஆஷா, சுரேஷ், அவர்களது எரிச்சலூட்டும் பாட்டி, இந்தக் குடும்பத்திற்குப் பழக்கமான நடுத்தரவர்க்க நண்பர்கள், வீட்டு வேலைக்காரி செல்லம், அவளது சம்பாத்தியத்தைக் கள் குடிப்பதில் செலவழித்துவிடும் அவளுடைய தந்தை முனியாண்டி என்று கதைமாந்தரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆறு வயதுடைய ஆஷாவின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் பேசும் ஆவிகள், கொலைகள், சாமியார்கள், ஸ்திரீலோலன்கள் எல்லோரும் வருகிறார்கள்.

இலங்கை இனப்போரும் நாவல்களும்

இக்கட்டுரையின் நோக்கம் இந்த இரு படைப்புகள் பற்றிக் கூர்மையான வாசிப்பை நிகழ்த்துவதல்ல. சில இலக்கிய அவதானிப்புகளை மட்டுமே இங்கே சொல்ல நினைக்கிறேன்.

அதற்கு முன் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று நினைவூட்டல். புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் ஆங்கிலத்தைவிடத் தமிழிலும் நிறைய உண்டு. அவை பற்றி இன்னொரு தடவை பேசிக்கொள்ளலாம். மற்றது மிக முக்கியமாக ஒரு பிழைதிருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. கணேசானந்தனின் நாவல்தான் ஈழ இனப் பிரச்சினை பற்றிய முதல் நாவலாகப் பெரும்பாலான மேற்கத்தைய மதிப்புரையாளர்கள் தங்கள் வியாசங்களில் கூறியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கூற்றுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இது மேல்நாட்டுத் திறனாய்வாளர்களின் குறுகிய வாசிப்பு விஸ்தாரத்தை அடையாளப்படுத்துகிறது. மற்றது இன்று ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிற ஆங்கிலத்தில் எழுதும் இலங்கைப் படைப்பாளிகளான சியம் செல்வதுரை, ரோமேஷ் குணசேகரா, மைக்கல் ஒண்டாச்சி போன்றவர்களில் கதைப்பரப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை ஓரத்திலேயே கையாளப்பட்டிருப்பதாகும்.

கணேசானந்தனின் நாவலுக்கு முன்னமே இலங்கை இனப் பிரச்சினையைப் பற்றிய நாவல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையவே வந்திருக்கின்றன. உடனடியாக நான்கு ஆங்கில நாவல்கள் நினைவுக்குவருகின்றன. ஒன்று, சிவானந்தனின் When Memory Dies. ஒரு தமிழ்க் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றியது. இந்த நாவலில் கனமான அரசியல் விசாரணை உண்டு. காலனியத்துடன் ஆரம்பமாகி 80களின் தொடக்கத்தில் தமிழ் விடுதலை இயக்க உள்நிகழ் சண்டைகளுடன் நாவல் முடிவடைகிறது. இந்த நாவல் தரும் தீர்க்கதரிசன வெளிப்பாடு: இன்றைய துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு இரு இன அரசியல்வாதிகளும் துணிந்து அரசியல் முடிவெடுக்கத் தவறியதே காரணம். இரண்டாவது, இலங்கையிலேயே பிரசுரிக்கப்பட்ட Nihal de Silva வின் The Road from Elephant Pass. இது விடுதலைப் புலிகளை விட்டு விலகி, புலிகள் செயல்படுத்தப்போகும் அடுத்த தாக்குதலைப் பற்றிய முக்கியத் தகவலை இலங்கை இராணுவத்திற்குத் தர வன்னியிலிருந்து தப்பியோடும் ஒரு பெண்ணையும் அவளைப் பாதுகாப்பாகக் கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுசெல்ல வந்த சிங்கள இராணுவ அதிகாரியையும் பற்றியது. இந்தக் கதையில் காதலும் உண்டு. நான் இதைச் சொல்லாமலே நீங்கள் யூகித்திருப்பீர்கள். இந்த நாவல் தரும் செய்திகளில் ஒன்று: பழைய சரித்திரப் பாடங்களையும் பௌத்த நூல்களையும் வைத்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. மற்றைய நாவல் Channa WickeremasekeraM¡ Distant Warriors. இதில் அவுஸ்திரேலியாவில் குடியேறிகளாக வந்த தமிழர், சிங்களவரது பார்வையில் இலங்கைப் பிரச்சினை பரிசீலிக்கப்படுகிறது. விட்டுவந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சண்டைகள், சந்தேகங்கள் புகுந்த நாட்டிலும் தொடர்கின்றன. நாவலில் வரும் ஒரு வாசகம்: 'இங்கேயே ஒருவரை ஒருவர் கொல்வதைவிடத் திரும்ப நம் நாட்டுக்குப் போய் அடித்துக்கொள்ளலாமே'. நான்காவது Roma TearneM¡ Mosquito. வயதடைந்த ஒரு சிங்கள நாவலாசிரியருக்கும் ஓவியத்தில் ஈடுபட்டுள்ள பதின்வயது சிங்களப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலின் பின்னணியில் இலங்கை யுத்தம் வர்ணிக்கப்படுகிறது. நாளாந்த வாழ்வில் மனிதநேயத்தையும் அன்பையும் காட்டும் சனங்கள், இன அரசியல் குறுக்கிடும்போது எப்படி நிதானம் இழக்கிறார்கள் என்பது நாவல் விடுக்கும் தகவல்களில் ஒன்று. இன்னுமொன்று: தமிழ் விடுதலை இயக்கங்கள் மிக இருமையான, ஈவிரக்கமற்ற சக்திகளாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களுடன் Jean Arasaynayagamத்தின் சிறுகதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆங்கிலத்தைவிட ஈழத் தேசியப் போர் பற்றித் தமிழில் மிக நுணுக்கமாகவும் அதனைப் பிரச்சினைக்குட்படுத்தியும் பல நாவல்கள் வந்திருக்கின்றன. ஷோபா சக்தியின் 'கொரில்லா', கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' அருளரின் 'லங்காராணி' ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 'ஒரு கோடை விடுமுறை' போன்ற எழுத்துக்களில் காணப்படும் ஆழமான பதிவு ஆங்கில நாவல்களில் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கருத்து நிலைகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் வாதங்கள் மூலமாக இலங்கை இனப் பிரச்சினையைக் குறித்து இயல்பாகத் தமிழ் நாவல்களில் காணப்படும் சிக்கலான ஆய்வு ஆங்கில நாவல்களிடையே மிகக் குறைவே.

சில இலக்கிய அவதானிப்புகள்

கணேசானந்தன், சமரசன் நாவல்களில் சில பொது அம்சங்கள் இருக்கின்றன. ஆங்கிலக் காலனியம் இக்கதைகளுக்குப் பின்புலனாகயிருக்கிறது. சமரசனின் நாவலில் வரும் பாட்டி அஸ்தமித்துப்போன அந்த ஆங்கிலேயப் பொற்காலத்துக்காக ஏங்குகிறார். கணேசானந்தனின் கதைமாந்தர்கள் ஆங்கிலப் பண்பாட்டை மிக வாஞ்சையுடன் நுகர்கிறார்கள். ஆனால் அதேவேளையில் இனப் பிரச்சினைக்கு ஆங்கில ஆட்சியைப் பழிபோடும் சுபாவமும் அவர்களிடம் இருக்கிறது. இரண்டு நாவல்களிலும் அரசியல் இருக்கிறது. ஒன்றில் துல்லியமாக, மற்றதில் மறைமுகமாக. இவர்களின் கதாமாந்தர்கள் பெரும்பாலோர் தமிழ் மேட்டுக்குடியினரே. தமிழைவிட ஆங்கிலமே இவர்களுக்குப் பரிட்சயமாயிருக்கிறது. சமரசனின் உமா, ஆஷா பாத்திரங்கள் படிக்கும் நாவல்கள் எல்லாம் ஆங்கில நாவல்களே. சமரசனின் வசந்திக்கு மலாய் மொழி தெரியாது. ஒரு ரயில் பிரயாணத்தின்போது மலாய் புரியாததால் வசந்திக்கு ஏற்பட்ட சங்கடம் புலனாகிறது.

இவர்களின் எழுத்து நடையில் வித்தியாசமிருக்கிறது. சமரசனின் நாவல் 19ஆம் நூற்றாண்டு விக்டோரியன் நாவல் பாணியிலிருந்தாலும் அதன் முக்கியச் சாரமான நீட்டுவாக்கில் (linear) சொல்லப்படும் தளைகளை மீறிக் கதை முன்னுக்கும் பின்னுக்குமாகச் சொல்லப்படுகிறது. கணேசானந்தனின் கூறுமுறை சற்று வித்தியாசமானது. இவரது நாவலில் பழைய பாணிக் கதை ஆக்கம் கிடையாது. கதைநகர்வு வழமையான உச்சகட்டத்தில் முடிவடைவதில்லை. குமரனின் மரணத்திற்குப் பின் நாவலின் விறுவிறுப்பு மங்கிப்போய்விடுகிறது. நவீனத்தின் சிதறுண்ட கூறுமுறையைப் பிரதிபலிக்கக் கதைப் பின்னல் சின்னச் சின்ன சில பக்கங்களே கொண்ட அத்தியாயங்களுக்கூடாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கதை சொல்லல் முறையினால் வாசகர்கள் சுலபமாகப் பிரதியுடன் நெருங்க முடிகிறது. இரண்டு நாவல்களிலும் பின்நவீனத்தின் கனியான மொழிவிளையாட்டு உண்டு. இந்த இரண்டு கதாசிரியர்களின் இலக்கிய ரசனையைப் பாதித்த முக்கியமான படைப்பாளிகளாகக் காணப்படுகிறவர்கள் எல்லாருமே மேல்நாட்டு இலக்கிய ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய, இலங்கைப் படைப்பாளிகளுமே. இவர்களின் இலக்கிய ரசனையைத் தூண்டிவிட்ட எழுத்தாளர்கள் பட்டியலில் காணப்படுவோரில் சிலர்: சார்லஸ் டிக்கின்ஸ், வர்ஜீனியா வுல்ஃ, பொக்னர், ரஷ்டி, அருந்ததி ராய். தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், அசோகமித்திரன், அம்பை அல்லது இன்று அதிக கவனத்தைப் பெறும் தலித், பெண்ணிய இலக்கியம் பற்றி அறிந்ததாக இவர்களுடைய எழுத்தில் ஆதாரங்களோ தடயங்களோ இல்லை. இவர்கள் இருவருக்குமே தமிழ்க் கலாச்சார மரபிலும் அதன் பழந்தமிழிலக்கியங்களிலும் தமிழர்களின் தொன்மங்களிலும் தமிழின் சமகாலப் படைப்பிலக்கியப் போக்குகளிலும் தீவிர ஈடுபாடோ பயிற்சியோ பரிச்சயமோ இவர்களின் இந்த ஆக்கங்களில் வெளிப்படவில்லை. தமிழ்ப் பேரிலக்கியங்களுடன் நெருங்கிவரச் சில குறைந்தபட்சத் தடயங்கள் மட்டும் தென்படுகின்றன. இவர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலந்தான் அறிமுகமாயிருக்கின்றன. கணேசானந்தனின் நாவலின் ஒவ்வொரு பிரிவு ஆரம்பத்திலும் முன்னோடிச் சொற்களாகத் திருக்குறள் இணைக்கப்பட்டிருக்கிறது. சமரசனின் நாவலின் தலைப்பு, Evening Is the Whole Day ஏ.கே. ராமானுஜனின் குறுந்தொகை மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது:

சுடர்செல் வானம் சேப்ப, படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார், மயங்கி யோரே: குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை; பகலும் மாலை - துணை இலோர்க்கே. (குறுந்தொகை 234)

தமிழ் மரபையும் அதன் பேரிலக்கியங்களையும் நவீனத்திற்கு மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கு இவருடைய எழுத்துக்களில் இல்லை. தமிழ்க் குடும்பம் என்ற குறுகிய எல்லைக்குள் அவர்களின் இலக்கிய வெளிப்பாடு செயல்பட்டிருக்கிறது. எனக்குக் கணேசானந்தனின் யாழினி சல்மான் ருஷ்டியுடைய 'நடுநிசிக்குழந்தை'களின் சலீமைச் சாடையாக ஞாபகமூட்டுகிறார். இருவரும் அவர்களது நாட்டின் சரித்திரத்தில் முக்கியக் கட்டத்தில் பிறந்தவர்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற நடு இரவில் சலீம் பிரசவிக்கிறார். ஈழத் தமிழ் மக்களின் கூட்டு ஞாபகத்தில் அழியா இடம்பெற்ற 1983 ஜூலை இனக் கலவரத்தில் யாழினி பிறக்கிறார். இருவருமே தங்கள் நாட்டின் சரித்திரத்தைப் பதிவுசெய்கிறார்கள். சலீம் இந்திய நாட்டுச் சரித்திரத்தையும் சரித்திரம் சாதித்த பெரும் தலைவர்களையும் பின்நவீனத்தின் எள்ளலுடன் சட்டினிமயமாக்கியிருக்கிறார். யாழினியின் பார்வையில் இந்தப் போலி நையாண்டியில்லை. சரித்திரமும் குடும்பமும் ஒரு சுமையாகக் கருதப்பட்டு ஒன்றுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாண உணவு உருவக நடையில் சொல்லப்போனால் இடியாப்பமாக்கியிருக்கிறார்.

கணேசானந்தனின் கதை மாந்தர்களில் பெரிய ஏமாற்றம் குமரனின் பாத்திரம். விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்குவகித்தவரிடம் இந்த விடுதலைப் போருக்கான ஆன்மீக, தார்மீக, அரசியல், பொருளாதாரக் காரணங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததிற்குப் பதிலாக இலங்கைப் பிரச்சினை தனிமனித வஞ்சம் தீர்க்கும் ஆணாதிக்கப் படலமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. குமரன் மூலம் இனப்போர் விளைவிக்கும் தீமையையும் இருளையும்தான் நாம் அறிகிறோம்.

சமகாலத்து இலக்கிய வகைமைகளைப் பார்க்கும்போது இந்த இரண்டு நாவல்களையும் பின்னைக் காலனியத்தைவிட, பின் - ராஜ் நாவல்கள் என்று எடுத்துக்கொள்வதுதான் சரி என்று எனக்குப் படுகிறது. பின் காலனியத்துவ நாவல்கள் பெரும் பாலும் காலனியத்துக்குள்ளாக்கப்பட்ட பிரஜைகளால் எதிர்ப்பு இலக்கியங்களாக எழுதப்பட்டவை. பின் - ராஜ் நாவல்கள் முன்னைய காலனிய ஆட்சியாளர்களால் தங்களுடைய மேலாதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகள், அவற்றின் மக்கள் நம்மைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என்று உறுதிப்படுத்த முயலும் இலக்கியமாகும். இந்த வகை இலக்கியத்துக்கு Paul Scottஇன் Raj Quartet முக்கிய முன்னுதாரணம். இதே இலக்கிய வகைப்பிரிவில் இம்முறை மேல்நாட்டவருக்குப் பதிலாகக் கீழை எழுத்தாளர்கள் மேல்நாட்டவருக்குக் கீழைத் தேசம் பற்றி விளக்க முயன்றிருக்கிறார்கள். இந்த இரு நாவலாசிரியர்கள் செய்திருக்கும் இலக்கிய வேலை இதுதான். வெள்ளையர்களுக்குப் பதிலாக நம்மவர்கள் ஆங்கில மொழியில் நம்மைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்த இரு நாவல்களின் பெரும்பாலான பெறுநர் ஆங்கிலேய வாசகர்களாகும். தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த நாவல்களில் இல்லை. கணேசானந்தன் வர்ணிக்கும் சில தமிழ்ச் சடங்குகள் இவற்றில் பழகிப்போயிருக்கும் தமிழருக்குக் கொஞ்சம் எரிச்சலைத் தரும். அதோடு இந்த விவரிப்பு குழந்தைத் தனமானதுபோல் தெரியும்.

சமகால வரலாற்றையும் நடப்பு அரசியலையும் மட்டுமே ஆவணப்படுத்துவது ஒரு நாவலின் வெற்றிக்குக் காரணமாகாது. இதுதான் கணேசானந்தன் நாவலின் பெரிய பலவீனம். ஒரு அரசியல் நெருக்கடியைப் பல்வேறு கோணத்தில் பார்க்கும் கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களுடைய செய்கைகள், மோதல்கள் மூலமாக அந்த அரசியல் பிரச்சினையைச் சிக்கல்படுத்தி, பின் அரசியல்வாதிகள் தர முடியாத, அவர்களுக்குக் கசப்புதரும் பரீட்சார்த்தமான ஒரு யோசனையை முன்வைப்பதுதான் ஒரு படைப்பாளியின் பணிகளில் ஒன்றாகும். பொது ஞாபகத்திலிருக்கும் சம்பவங்களை மறுபடியும் நினைவூட்டுவது இலக்கியச் சோம்பேறித்தனம் என்று நினைக்கிறேன். இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுவிடை கணேசானந்தனின் நாவலில் இல்லை. கணேசானந்தன் ஒரு வரலாற்றுப்பதியர். இன்றைய இலங்கை அரசியல் நிலப்பரப்பை மாற்றி அமைப்பதற்கான இலக்கியத் திராணி அவருடைய ஆக்கத்தில் இல்லை.

கடைசியாகத் தமிழில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையைக் கணேசானந்தனோ அல்லது சமரசனோ படிக்க வாய்ப்பில்லை. மற்றவர்கள் மூலம் அறிய நேர்ந்தால் அந்த இளம் உள்ளங்கள் புண்படக்கூடும். அவர்களைக் குஷிப்படுத்த சில நல்ல செய்திகளைக் கூறி முடிக்கிறேன். இது உங்களையும் இந்த நாவல்களைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தூண்டும் என்றும் நினைக்கிறேன். இவர்களுடைய படைப்பில் ஆழம் இல்லாவிட்டாலும் அழகு இருக்கிறது. இலக்கியத் துள்ளல் இருக்கிறது. தமிழ் அடையாளம் என்ற பாரம் எவ்வளவு பொறுப்பானது என்ற உணர்வு இருக்கிறது. இவர்களின் எழுத்தில் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது. தனி மனித சரித்திரத்தையும் நாட்டு வரலாற்றையும் ஒட்டுமொத்தமாக, தொகுத்திணைத்துப் பரிசீலிக்கும் துணிச்சல் இருக்கிறது.

 

இவற்றைவிட இவர்களின் எழுத்து தரும் கவர்ச்சியான தகவல்: கதைகளின் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு எல்லாம் இலக்கிய வசதிக்காகச் செய்துகொண்டவையே. நாளாந்த வாழ்க்கையில், முக்கியமாக இன்றைய ஈழத் தமிழர் வாழ்வில் இது சாத்தியமில்லை. கணேசானந்தனின் கூர்மையான வார்த்தைகளுடன் முடிக்கிறேன்:It would be false to say that there is a beginning to the story, or a middle, or an end. Those words have a tidiness that does not belong here. Our lives are not clean. They begin without fanfare and end without warning. This story does not have a defined shape or a pleasant arc. To record it differently would not be true.

- சச்சிதானந்தன் சுகிர்தராஜா

 

Related Articles