ஜடாயு

சூரியன் இறங்கி வெக்கையை விதைத்துக் கொண்டிருக்கும் எமது எல்லாக் கடலோரக் கிராமங்களையும் போல இதுவும், தட்டி விழுத்தவும், தூக்கி அணைக்கவும், இதயம் சுமக்கும் மனிதர்கள் வாழும் சின்னக்கிராமம். கிழக்குத் தொடுவானம் கடலின் மடியிலும், மற்றைய திசைகள் பூராவும் விரிந்து நின்ற பனைகள் தலையிலும் வானம் தாங்கும் அந்த ஊரில் ஜந்து கல்வீடுகளைத் தவிர மிச்சமிருந்த முப்பத்திச் சொச்சம் வீடுகளும், கிடுகும், பனையோலையும் வேய்ந்த மண்வீடுகள். கடலும், பனையும், ஓயாத உடலுழைப்புமே அக்கிராம மக்களின் வயிற்றுக்கான நம்பிக்கைகள்.

நிலவில்லாத வானத்தில், பரந்து காலித்துக் கிடந்த நட்சத்திரங்களின் தெறிப்பில் இருட்டுக் கசிய, காற்றுத் தூக்கிவரும் கற்கோவளக்கடலின் இரைச்சலும், கூரைக்கு மேலால் அவ்வப்போது கத்திச் செல்லும் இரவுப்பறவைகளின் சத்தமும், இரவின் அமைதியைக் கீற உறங்கிக் கிடந்தது ஊர்.

சடாய்த்து வளர்ந்த மாமரத்தின் கீழிருந்த சுப்புக்கிழவனின் வீட்டில் மட்டும் இன்னமும் வெளிச்சம் தெரிந்தது. மாரிமழைக்கென சாய்வு இறக்கிய கிடுகுக் கொட்டகைக்குள் வாங்கில் போட்டு, கிழவனை வளத்தியிருந்தார்கள். அடங்கி விடுவது போன்ற கேவலுடன் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கும் ஒவ்வொரு தரமும், "என்ர குஞ்சியய்யா" என யாராவது ஒரு சொந்தம் அழத்துவங்க கிழவனின் மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து காதுச்சோணைக்குள் இறங்கும். பின்னர், வாய்க்கால் நீர் போல மூச்சு சீராக ஓடத்துவங்கும்.

தலைவாசல் மண்குந்தில் எரிந்த கைவிளக்கு வெளிச்சத்தில், மூலைக்கு மூலை குந்தியிருந்த முகங்களில் இரண்டு இரவுகளின் நித்திரையின்மையும், பசியும், களைப்பாய்த் தொங்கிக் கிடப்பது தெரிந்தது. வருவதும் போவதுமாயிருந்த ஆட்களைப் பார்த்து, குலைப்பதற்கும் தெம்பில்லாமல் கூட்டுக்கால் போட்டு படுத்திருந்தது நாய். கிழவனின் முடக்கம், கவனிப்பாரற்றுப் போன பிராணியின் ஒட்டிய வயிறு காட்டியது. துக்கவீட்டில், அழுகை, ஒப்பாரி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு படர்ந்திருக்கும் அந்தகாரமும், ஒரு மணமும் இருக்கும்.

அந்த மணமும் காற்றுடன் மெல்ல மெல்ல வீட்டுக்குள் நுழைந்துவிட்டது.

**************************

ஒரேயொரு கைவிளக்கான அவரது மகன் கல்லூரியிலிருந்து வீடு திரும்பாமல் போனதிலிருந்து சுப்புக்கிழவனின் ஜீவன் சரியத் தொடங்கியது. மகன் போன சிலநாட்கள் கடலுக்குச் சென்ற கிழவன் நிறைவெறியில்தான் வீடு திரும்பினார். வெறியில் கிழவன் அழுத காட்சியின் மீது, வயோதிகத்தின் சாயல் படிந்து விட்டாலும், முறுக்கவிழ்ந்து போன தேகத்தில், முன்னாளைய வலிமையின் சுவடுகள் பதிந்துதான் இருந்தன. அன்னகாரம் சிறுத்து பல மாதங்களாகியும் நடமாடித் திரிந்த கிழவன், ஒருநாள் விடிகாலை மூன்றுமணிக்கு நல்ல உறக்கத்தில் கிடந்தபோது, "ஜயா" என்ற அழைப்புக்குரல் கேட்டு எழும்பி, கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கி, நான்கு ஜந்து மைல்களுக்கப்பால் மணற்காடு கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து அட்டணக்கால் போட்டபடி நாள்பூராக அலைக்கரையில் அமர்ந்து கடலைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியதிலிருந்து ஆரம்பமாயிற்று கிழவனின் உள்வாழ்வு.

பேச்சு மூளையிலிருந்து தொலைந்து போயிற்று.

திடீர் திடீரென பிறக்கும் வெடிச்சிரிப்பும், ஓயாமல் பனித்துக் கொண்டிருக்கும் கண்ணீருமே, மனசு லயம் தப்பிவிட்டதற்கான குறிப்புகளாய் இருந்தன. கெஞ்சி மன்றாடி சாப்பிட இருத்திவிட்டால் கை சோற்றைப் பிசைந்து கொண்டிருக்க, பார்வை, வேலிப்பூவரசின் மீதோ, அதற்கு மேலால் கவிந்துள்ள வானத்தின் மீதோ வெறித்துவிடும். "ஜயா...ஜயா..." எனப் பத்துத் தடவைக்கு மேல் கூப்பிட்டுத்தான் மனதை இழுத்துச் சோற்றில் வைக்க முடியும். அப்படியும் இரண்டோ மூன்றோ கவளத்துடன் கண்ணீரும் சிரிப்பும் வந்து இடைநிறுத்தி விடும். காவலிருந்த நாயின் நம்பிக்கை மட்டும் பொய்க்காது.

மனிதர்களுடன்தானே பேச்சுக்கு அவசியமற்றுப் போனது. மாங்கிளைகளில் வந்தமரும் காகங்களுடன் பேசுவது வழமையாகியது. கானல் தெறித்தோடும் மத்தியானங்களில் நிழல் தேடி வந்த காகங்களின் கரைதல் அவருக்கு அர்த்தமாகியது. பதில் சொல்லிக் கொள்வார்.

"ஓம்.. ஓம்.. இண்டைக்கு தம்பி வருவான்... கட்டாயம் வருவான்... ஜயாவைத்தேடி."

"அவனைப்பாக்காமல் நான் சாகமாட்டன்..."

அந்த நம்பிக்கைக்குரல் அன்றிரவு வரை தொடர்ந்து ஒலிக்கும். பக்தர்களின் "ஓம்" என்ற சுநாதம் காற்றில் மிதந்து பயணிப்பது போல, "இண்டைக்கு தம்பி வருவான்" என்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார். இடையிடை அழுகை வெடித்து துடித்துக் கொண்டிருக்கும் கன்னங்களை கண்ணீர் நனைக்கும். எனினும் வார்த்தைகள் தொடரும்.

"இண்டைக்கு தம்பி வருவான் ஜயாவைத் தேடி..."

**************************

மாரிக்காலம் சில நாட்கள் கடல் கோஷமிட்டு அரைப்பனை உயரத்திற்கு அலையெறியும். மீன்பிடிப்பு இருக்காது. விறகிலிருந்து வீடுவரை ஈரத்தில் ஊசிப்போய் இருக்கும் ஒறுப்புக்காலம் அது. கிழவன் கையில் கொக்கைத்தடியுடன் பனங்கூடல், பற்றைகளுக்குள் அலைந்து திரிந்து சண்டி, குறிஞ்சா, முல்லை இலைக்கறிகள் பறித்துவந்து திண்ணையில் இருந்தபடி அரிந்து கொண்டிருப்பார். மகனோ பசி பொறுக்க மாட்டாமல் அடுக்களையைச் சுற்றிச்சுற்றி வருவான். அவனைப் பார்த்து நரைத்தாடிக்குள் சிரித்துக் கொண்டு கிழவன் பாடுவார்.

"தம்பீ.!.. கல்லினுள் தேரைக்கும் கருப்பைக்குள் முட்டைக்கும்...."

பாட்டையும், அவரது சிரிப்புக்குள் ஒளிந்திருக்கும் நக்கலையும், பார்த்துவிட்டு பசிவேகத்துடன் வந்து தகப்பனுடன் வாதம் செய்வான் மகன்.

"ஜயா!.. அங்கை கல்லுக்கை ஒண்டும் உங்கட கடவுள் கொண்டே வைக்கிறேல்லை. அது இயற்கை."

"ம்..ம்"

கிழவன் படிக்காத தற்குறியாக இருந்தாலும் அநுபவஸ்தன். தந்திரசாலி. பதிலால் மடக்கிப் பிடிப்பான் மகனை.

"அப்பதம்பி!.. பசியும் இயற்கைதானே? பொறு!..ஆக்கப்பொறு. ஆறப்பொறு. பொறுத்தார் பூமி ஆளுவார்..!!"

"ம்கூம்... அதெல்லாம் அந்தக்காலம். இப்ப பொறுத்தார் வாய்க்கு பொரியும் கிடையாது."

மகன் பொறுத்திருக்கவில்லை. கல்லூரி விடுமுறைநாட்களில் வழமையாக, சோமுச்சம்மாட்டியின் வலையில் எடுபிடியாக கடலுக்குப் போய் உழைத்து, ஐந்தோ பத்தோ தாயிடம் கொடுப்பவன். இப்போது வேறு எங்கேயோ சைக்கிளில் அலைந்து வெயில் குளித்தான். கனவுகள் வளர்த்தான். இரவும் இருட்டும்கூட அவன் கைகளில் விழுந்தது. கூட்டங்களும், கூடிப்பேசுவதுமாக வெளியில் எவ்வளவுக்கெவ்வளவு வாயையும், காதையும் விரித்து வைத்தானோ அவ்வளவுக்கும் மாறாக வீட்டுக்குள் மெளனியாகிப் போனான்.

பின்னேரத் தேத்தண்ணி, நேயர்விருப்பம் எல்லாமே அவனில்லாமல் சப்பென்று போனது. கடைகண்ணிக்குப் போக, அவனைத்தேடிவிட்டு புறுபுறுத்துக்கொண்டு அம்மா தான் போய் வந்தாள்.

குட்டுவதற்கும், சண்டை பிடிப்பதற்கும் ஆளில்லாமல் அவனது அக்கா தனித்துப் போனாள்.

எதிர்காலத்திற்கான ஒத்திகையை அவளுக்கு நடத்திக் காட்டியது போல, ஒருநாள் கல்லூரிக்குப் போனவன் காணாமலே போனான். அவனது சைக்கிள், புத்தகம் என்பன மட்டும் மறுநாள் யார் மூலமாகவோ வீடுதிரும்பின.

அன்று காலை கல்லூரிக்குப் போவதற்கு படலையைத் திறந்தவன் தயங்கித் தயங்கித் தமக்கையைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையின் ஈர்ப்பு, அன்பின்பிரிவு. அதை என்றென்றைக்குமாக அவளது நெஞ்சத்தில் விதைத்துவிட்டு அவன் போய்விட்டான்.

*************************

தகப்பனின் கால்மாட்டுப் பக்கம் கீழே தாழ்வாரத்திண்ணையில் சாய்ந்தபடி இருந்தாள் சாந்தி. கண்ணீர் இல்லை. வத்திப்போனதோ, விரக்தி செழித்து அடங்கிப் போனதோ தெரியவில்லை. அவள் அழவில்லை. தம்பியின் நினைவுகள் நெஞ்சிலிருந்து படரும்போது, கிழவனின் மூச்சு இழுக்கும் சத்தம் அவளை நிஐத்திற்கு திருப்பிக் கொண்டிருந்தது. அம்மா அரைமயக்கத்தில் சாய்ந்து விட்டாள். நாகம்மாச்சி அம்மாவின் தலையை மடியில் வைத்து பனையோலை விசிறியால் விசுக்கிக் கொண்டிருந்தார். ஒரு கிழவியை இன்னொரு கிழவி குழந்தையாக அணைத்து வைத்திருந்தது.

தம்பியும் ஒரு குழந்தையாகத்தானே இருந்தான். ஜயாவுக்கும், அம்மாவுக்கும், எனக்கும், குழந்தையாக இருந்த அவனுக்கு எப்படி எங்களை விட்டுவிட்டுப் போக தைரியம் வந்தது?

தகப்பன்சாமி போல, வேலி அடைப்பதிலிருந்து வேட்டி கட்டுவது வரை, அவனது சொல்லுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த அன்புதான் ஐயாவை விழுத்திவிட்டதோ?

ஏமசாமங்களில் அவன் வந்து சைக்கிளை ஸ்ராண்ட் போடும்போது, பாயிலிருந்து தலையைத் தூக்கி "காலைக்கழுவு தம்பி" என்று கோபமில்லாமல் சொல்லும் ஐயா இப்பொழுதுகூட அவன் வந்தால் எழும்பி விடக்கூடும்.

சைக்கிள் சத்தம் கேட்டதும் "சாமப்பிசாசு வந்திட்டுது" என்று முணுமுணுத்துக் கொண்டு கைவிளக்கைக் கொளுத்தி, அடுப்படிக்குச் சென்று சாப்பாடு போட்டு, அவன் திறுத்தியாக சாப்பிட்டதும், கீரைச்சட்டிக்குள் மிச்சச் சோத்தைப் போட்டுக் குழைத்து ஏனோதானோவென்று சாப்பிட்டு எழும்பும் அம்மா, அவன் வீடுவிட்டுப்போன இரண்டு மாசமாக கால்வயிறும் நிறையாமல் அதுவும் என்ரைஆய்க்கினையாலை கண்ணீரும் சோறுமாகச் சாப்பிட்டு உயிர்தாங்கிய அம்மா மயங்கி விழுந்துவிட்டாள்.

"பாடமாக்காதை பாடத்தை விளங்கிப்படி" எண்டு எனக்கு யோசனை சொல்லி, அதைக் கேக்காமல் நான் சத்தம் போட்டுப் படிக்க, என்னுடன் சண்டைக்கு வந்து, இப்ப ஆரோடை அவன் சண்டை பிடிப்பான். சண்டை என்று நினைத்ததும் சாந்திக்கு உடம்பு நடுங்கியது. "என்ர வயிரவரே தம்பியை சண்டைக்கு மட்டும் போகவிடாதை" என்று வேண்டினாள்.

அப்போது கோடைவிடுமுறை. உசரிப்பனைக்கு மேலால் விடிவெள்ளி கிளம்ப, வெள்ளாப்பு வலைக்கு கடலுக்கு நடக்கும் ஐயாவுக்குப் பின்னால் சாரத்தை அவிட்டு தலைவரை போர்த்திக்கொண்டு ஓடுவான் தம்பி. நித்திரையைக் குளப்ப மனமில்லாமல் பலநாட்கள் அவனை எழுப்பாமலே ஐயா கடலுக்குப் போய்விடுவதுண்டு.

முதல்முறையாக சோமுச்சம்மாட்டி அவனை அணியம் வலிக்க விட்டபோது, வெற்றிவீரன் போல திரும்பி வந்து, ஜயாவை அவன் செய்த கேலியில் அன்று வீடு அதிர்ந்தது.

"அம்மா..! ஜயா கடைகால் வலிக்க, நான் அணியம் வலிச்சன். இண்டைக்கு ஜயாவைவிட எனக்கு ரெண்டு பங்கு கூட."

"குறுக்காலபோன சம்மாட்டி..! உன்னை ஏன்ரா அணியம் வலிக்க விட்டவன்? நெஞ்சுக்கை பிடிச்சா அவனே வந்து வைத்தியம் பாப்பானாம். அறுதலிமோன்..!!."

அம்மா சம்மாட்டியைத் திட்டிக்கொட்டி விட்டு இரவுச் சாப்பாட்டுக்கு தம்பிக்கு முட்டை அவித்து வைச்சாள்.

கேலியும் சிரிப்புமாகக் கழிந்த காலம் இழந்து போய்விட்டதா.? இந்தக் கிடுகுக்கூரைக்குள் ஒழிந்திருந்த அந்தச் சந்தோசகாலம் திரும்பி வந்தால் இளமை பூத்து, எழும்பி நடந்துவிடும் வீடு.

படலை திறக்கும் சத்தம் கேட்டது. நாய் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்து விட்டது. இருட்டை ஊடுருவி ஒரு மெலிந்த உருவம் வந்து கொண்டிருந்தது.

நடையை வைத்தே வருவது தங்கச்சியாச்சி என சாந்தி தெரிந்து கொண்டாள். தம்பி இருந்தால் கிழவி வீட்டுக்குள் வரமாட்டாள். இப்போ இரண்டு மாசமாக திரும்பவும் வந்து போய்க் கொண்டிருக்கிறாள். ஆரம்பத்திலிருந்தே ஆச்சிக்கும் அவனுக்கும் ஒத்துவரவில்லை. "சீலையைத் தோச்சுக் கட்டு" என்று ஓயாமல் கரைச்சல் கொடுப்பான். ஆச்சி அதே பச்சைச் சீலையைத்தான் இப்பவும் உடுத்திருக்கிறாள்.

"அது விரதமடா தம்பி..! துச்சாதனன் வந்து உரிஞ்சால்த்தான் உவள் விடுவாள்" என்று ஐயா சொல்லப்போய், ஒருநாள் இரண்டு பேருக்கும் சண்டையே வந்து விட்டது.

அன்றிலிருந்து ஆச்சி ஐயாவுடனும் கதைப்பதில்லை.ஆனால், ஐயா படுக்கையில் விழுந்த நாளிலிருந்து இந்தக்கி ழவி படும் பாட்டைப் பார்க்க ஐயாவிலை எவ்வளவு பாசம் வைச்சிருக்கெண்டு தெரியுது. கூனல் முதுகுடன் வாதக்காலையும் இழுத்து இழுத்து இப்ப வந்திருக்குது. வெற்றிலை போடாத நாளே இல்லாத ஆச்சி, பொக்கை வாய் இடிஞ்சு போய் திரிவதைப் பார்க்கவே பாவமாக இருக்குது.

அதுசரி, அடிச்சாலும் பிடிச்சாலும் அன்பு வைச்ச சீவன் சரிஞ்சு போய்க் கிடக்க ஆருக்குத்தான் மனசு பொறுக்கும்.

வீட்டுக்கப்பைப் பிடித்துக் கொண்டு மெல்லக் குந்தினாள்ஆச்சி. வாடின வெற்றிலையாகக் கிடக்கும் சாந்தியைப் பார்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டாள்.

"ராத்திரியாது ஏதாவது சாப்பிட்டியேடி பிள்ளை..?"

"இடியப்பம் அவிச்சு வச்சிட்டு வந்து நூறுதரம் கூப்பிட்டுப் பாத்தன். இந்த இடத்தைவிட்டு எழும்பிறாள் இல்லை. நாங்கள் என்னணை ஆச்சி செய்யிறது..?" என்றாள் பாக்கியம்மாமி.

"எத்தின நாளைக்கெண்டு இந்தச்சீவன் இழுத்துக்கிடக்கிறது. எடீ.. தங்கச்சி..! தந்தியைக்கிந்திய அடிச்செண்டாலும் தம்பியைக் கூப்பிடுங்கோடி."

சாந்தி நிமிர்ந்துஆச்சியைப் பார்த்துவிட்டு பேசாமலே இருந்தாள். எந்தத் திக்கில எந்தக் காட்டுக்குள்ளை இருக்கிறானோ ஆருக்குத் தெரியும். தெரிஞ்சால் நானே போய் இழுத்துக் கொண்டு வந்திடுவனே. என மனதில் எண்ணினாள். அவளுக்கு, ஜயா சேடம் இழுக்கும் ஒவ்வொரு தரமும் தலைக்குள் வாளால் அரிவதுபோல வேதனை கண்டது. நாரி இத்துவிடும் போல வலித்தது. இடம் மாறி இருக்கக்கூட உடம்பில் பலம் இல்லாமல் முழங்காலில் தலையை முட்டுக்குடுத்துக் கொண்டு வெறித்தபடி இருந்தாள்.

"ஆருக்கணை அவன்ரை விலாசம் தெரியும்..? விசயம் தெரிஞ்சாலும் அவன் உடன வரேலாதணை" என்று அங்கலாய்த்தாள் கிளி மச்சாள்.

கிளிமச்சாளின் பதிலைக் கேட்ட ஆச்சி பலநிமிஷமாக எதுவும் பேசவில்லை. கடுமையான யோசனையில் இருந்தாள். அவளுக்கு, கிழவனின் உசிர் அந்தரிச்சுக் கிடப்பது, தாயையும் மகளையும் சரிச்சுப் போடும் எண்ட பயம் கிளம்பி விட்டது. குமர்ப்பிள்ளை ஆனசாப்பாடு இல்லாமல் வதங்கிப் போவது நெஞ்சை அறுத்தது. பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல "கிளி உடன போய் உவன் ராசனைக் கூட்டி வா" என்று கட்டளையிட்டாள்.

ராசன் தம்பியின்ர கூட்டாளி. இரண்டு பேரும் இரணையள் மாதிரி. இவன் செய்யிற குளப்படிகளுக்கெல்லாம் குற்றச்சாட்டு தம்பியின் தலையில் விழுந்து விடும். படிப்பு ஏறவில்லை என்று கடலுக்குப் போகிறான். தம்பி போனபிறகு, விறகு கொத்துவதிலிருந்து கடைக்குப் போறதுவரை அவன்தான் செய்து தருகிறான். நல்ல பாசமான பிள்ளை. இவ்வளவு நேரமும் இந்த மாமரத்துக்குக் கீழ குந்தியிருந்துட்டு இப்பத்தானே போனான். வெள்ளாப்பு வலைவளைக்கப் போறவன்ர நித்திரையை ஏன் குளப்புகிறார்கள் என மனதில் கவலைப்பட்டாள் சாந்தி.

நித்திரைக் குளப்பத்துடன் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்த ராசனைக் கையைப்பிடித்து இழுத்துப்போய், ஆச்சி குசுகுசுவெண்டு ஏதோ சொல்லிவிட்டு வாதக்காலை மறந்து தாவித்தாவி வெளியே போனாள். சொற்ப நேரத்தில் நாகம்மாச்சியின் வீட்டிலிருந்து ஒரு குண்டுக்கோப்பையில் பால் கொண்டு வந்தாள்.

பாலை ராசனின் கையில் கொடுத்துவிட்டு கிழவனுக்குக் கிட்டவந்து நனைந்திருந்த கன்னத்தை தன் சீலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு "அப்பு உன்ர மோன் வந்திருக்கிறானடா முளிச்சுப்பார்..!" எண்டு கூப்பிட்டாள்.

ஒவ்வொரு புலனாக மெல்ல மெல்ல இழந்துபோய்க் கொண்டிருக்கும் அந்தத் தேகத்தில் மூச்சைத்தவிர எந்தவித இயக்கமும் தெரியவில்லை.

அருகே வந்த ராசன் ஒரு கரண்டி பாலை எடுத்து வாயில் விட்டபடி "ஐயா.. ஐயா..! நான் தம்பி வந்திருக்கிறன்" என்று கூறினான்.

ஏங்கிக் கிடந்த செவிகளுக்கு குரல்பேதம் தெரியுமா.? ஓய்ந்து போன ஓராயிரம் நரம்புகளிலும் "ஐயா" என்ற சத்தம் பாய்ந்தது. சிறகுகளை இழந்தும், அந்த ஆத்மாவுக்குள் அடைபட்டுக் கிடந்த உயிர்ப்பறவை இதயச்சுவர்களை உடைத்துக் கொண்டு விம்மிப் புடைத்தது. வாய்க்குள் விட்ட பால் கடைவாயால் வழிய, மூச்சு சீரில்லாமல் பதகளித்தது. ஒட்டி வற்றிய உடம்பிலிருந்து நெஞ்சுக்கூடு தனியாக பிரிந்து விடுமாப்போல ஏறி இறங்கியது.

பிறகு,சீவன் அடங்கி விட்டது.

- ஜெயரூபன் (மைக்கேல்)

Quelle - Pathivukal

Drucken   E-Mail

Related Articles

ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்