இருதரக் காதல்

கிறிஸ்மஸ் பாட்டி இன்று மாலை. நாம் வேலை செய்யும் அந்தப் பிரமாண்டமான கார் கம்பனியின் ஊழியர்கள் ஒன்றாகக் கலந்து ஆடிப்பாடி உண்டும், குடித்தும் சிலர் அதற்கும் கொஞ்சம் மேலேயும் மகிழும் தினம்.

பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், கடந்த 15 வருடங்களாக இந்தப்பாட்டிக்கு சென்றது கிடையாது. இப்போ நாம் வேலை செய்யும் இடத்தில் மாதம் ஒருவர் எதோ ஒரு மரணச் செய்தியை வந்து சொல்லியபடியே இருப்பார். இந்தச் செய்தி இன்று அல்ல அன்றும் இருந்திருக்கும், ஆனால் அதனை கேட்கும் வயதோ! அல்லது அதனை உள்வாங்கும் மனமோ!! அப்போ இந்த இதயத்திற்கு இருந்ததில்லை. இளமை! இளமை!! இளமை!!! இதற்கும் முதுமைக்கும் -மை- பொதுவாக இருக்கின்றது. இந்த மை மட்டும் இல்லை என்றால் இங்கு முக்கால்வாசிப்பேர் முதுமைதான்.

இந்த முதுமை சில நேரங்களில் தத்துவம் பேசும், பல சமயங்களில் தத்தளிக்கும். ஒரு கவிஞர் சொன்னார் இளசுகள் வயசுக்குவர, அனுபவிக்கத் துடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். முதியவர்கள் வயசுபோக எல்லாம் முடியப்போகுதே என்ற பயத்தில் இளசுகளையும் சிலசமயம் முந்திக்கொண்டு ஓடுகிறார்கள்.

இப்படியாக அடுத்த ஆண்டு இந்த கிறிஸ்மஸ் பாட்டியில் கலந்து கொள்ள நான் இருப்பேனோ என்ற அச்சத்தில்தான் பல வருடங்களாக கலந்து கொள்ளாத இந்த பாட்டியில் இன்று கலந்து கொள்கின்றேன்.

நேரம் மாலை 7 மணி வின்ரர் காலம் என்றதால், நேரத்துடன் வெளிச்சம் மறைய, மின் ஒளிகள் பலவர்ணங்களில் ஒளி பரப்பத் தொடங்கின.

அந்தப் பிரமாண்டமான உணவு விடுதியில், நடுவில் ஆடப் பாட இடம் விட்டு, சுற்றிவர அமரக்கதிரைகள் இடப்பட்டு இருந்தன. ஜோடி ஜோடியாக பலர் வந்தனர். சிலர் தனித்தனியாக வந்து ஜோடி ஜோடியாக அமர்ந்தனர். ஆண்கள் பலரரையும் என்னால் இனங்காணமுடிந்து, ஆனால் பெண்கள் பலரையும் அவர்கள் வாய்திறந்து பேசும் மட்டும், அவர்கள் யார் என்று தெரியாத வண்ணம் முகத்திற்கு முலாம் பூசி வந்தனர்.

வேலை செய்யும் போது அனைவரும் ஒருவகையான ஆடையுடனே வருவார்கள். இப்போ அவரவர் விரும்பும் ஆடைகளில் வந்து இருக்கிறார்கள். ஆடைபாதி ஆள்பாதி என்பார்கள்! உண்மைதான் இங்கு வந்த அந்த யேர்மன் பெண்களில் பலரும் ஆடை பாதிதான்.

இந்தப் பாட்டிக்கு என்றே 2 மாதம் கடும் டயட்டில் இருந்தது அவர்களது இடையில் தெரிந்தது. கட்டிய மனைவியுடன் பேசுவதை விட, நாம் ஒவ்வொருவரும் வேலசெய்யும் இடத்தில் பேசும் பழகும் பெண்கள்தானே அதிகம். நாம் நன்றாக வாழ்வதற்காக வாழ்வின் பாதி நேரம் வேலை செய்யும் இடத்தில் அல்லவா செலவு செய்கின்றோம்.

நேரம் 8.00 மணி தூரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வருவது தெரிந்தது. யார் என்று தெரியவில்லை. கிட்டவந்ததும்தான் தெரிந்தது அது எம்முடன் வேலை செய்பவர்கள்தான் என்று. பெண்களுக்கு முதலிடம் அது நம்மிடம் மட்டுமல்ல, இது பொதுவான கலாச்சாரம். வந்தவர் பெண்ணின் யக்கெட்டை கழட்டி உதவினார். அவளும் உரிமையுடன் இடையை நெளித்து, கைகளைத் தூக்கி, எங்கு எங்கு அழகு கொட்டிக்கிடக்கிறதோ, அதனை ஒரு சுயவிளம்பரம் செய்து சுழன்று நின்றாள். பதிலுக்கு அவனின் உதவிக்கு நன்றியாகக் கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அமர்ந்தாள்.

இன்னுமொரு ஜோடி மேசையில் வைனும், பியரும் இருக்கு, அதில் போதை இல்லை என்று இருவரும் கைளைக் கோத்து பிசைந்து கொண்டு இருந்தனர். எதுவுமே தப்பு என்று எண்ணினால்தான் தப்பு, மற்றும்படி சர்வசாதரணமாக யாவும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. வண்ணவிளக்கும் டிஜே இன் பாட்டும், மெதுவாக யாவரையும் கிளர்ந்து எழ வைத்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொருவர் வருகையின் போதும் மத்தாப்பு வெடிப்பது போல் எல்லோரும் ஒரு புன்னகைய உதிர்ந்து விட்டு, தத்தம் மேசையில் இருப்பவர்களுடன் கதைத்தக்கொண்டு இருந்தார்கள்.

என்னடா இதுதான் பாட்டியா? என்ற எண்ணம் அடிமனதில் மேய்ந்தவண்ணமே இருந்தது. பாட்டி ஒழுங்கு செய்த பெண் நம்முன்னே வந்து இனி நீங்கள் உணவு உண்ணலாம், யாவும் ரெடியாக மேசையில் உள்ளது, உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்யுங்கள். யாவருக்கும் எங்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துகள் என்றாள்.

எவரும் ஓடிப்பிடித்து உணவு எடுகச் செல்லவில்லை. காரணம் பொறுமையும் அல்ல, எருமையும் அல்ல, அவர்களுக்கு குடித்தது போதுமா? அல்லது இன்னும் குடித்துவிட்டு உண்போமா என்ற பட்டிமன்றம் மனதுக்குள் நடந்துகொண்டு இருந்ததே, அந்தப் பொறுமைக்குக் காரணம்.

கல்யாணம் பண்ணிட்டோம், பிள்ளை பெத்திட்டோம், தாத்தாவகிவிட்டோம், இனி எமக்கு எதற்கு என்று அந்த அந்தப்பருவத்தில் எதையுமே அனுபவிக்காத தியாகிகள்தான் நாம்.

திருமணம் நடக்கும் முன் வரும் மனைவிக்கு, கணவனுக்கு நல்லவனாக, நல்லவளாக இருக்வேண்டும் என்றும், அப்போது மகிழவில்லை. திருமணத்தின் பின் ஆட்டம் பாட்டம் எல்லாம் குடும்பத்துடன்தான் என்று போட்ட சட்டம் அதனையும் அனுபவிக்கவிடவில்லை. சரி என்னதான் நடக்குது உலகத்தில் இப்போ! எம்மை கேட்க யார் என்று வயதுக்கவசத்தை மாட்டிக்கொண்டு, பாட்டிக்கு வந்தால் அந்த, அந்த, வயசிலும் அவன் அவன் மகிழ்வாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றான்.

முன் மேசையில் இருக்கும் சோடி 24 வயது, நிச்சயமாக அந்தவயதில் அவன் செய்வதை நான் செய்வில்லை. பக்கத்து மேசை வயசு 40, அவன் செய்யும் வேலைகளில் பாதியும் நாம் எண்ணவும் இல்லை. பின்னே ஒரு 60 வயது அவர்கள் காணும் மகிழ்வு நாம் நாளையும் காணமாட்டோம்.

இப்படியாக குடிக்காமலே என் புத்தி தடுமாறவைத்தது பாட்டி. பலரும் உணவு உண்டு முடிந்து இருக்கைக்கு வர டீஜே பாட்டுப்போட்டார். அவ்வளவுதான் மின்மினிப்பூச்சிகள் போல் பறந்து பறந்து ஆடத்தொடங்கினர். யாருடைய ஜோடி யார் என்று எனக்கு அல்ல, அவர்களுக்கும் தெரியவில்லை. ஆடைகள் பாதி! அதிலும் பாதியை கழட்டி கதிரைக்குப் போட்டுவிட்டு ஆடச்சென்றனர்.

கதிரைகள் மட்டும் ஆடைகளுடன் அடக்க ஒடுக்கமாக இருந்தது. எவ்வளவு இயல்பாக இயற்கையாகத் தோன்றவேண்டுமோ அந்த அளவு தோன்ற ஆடைகளைத் துறப்பதில் அண்களை மிஞ்சி நிற்பவர்கள் (யேர்மன்) பெண்கள்.

எல்லோரும் ஆட, ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆட்டத்தை அல்ல. ஒருவர் ஒருவரை பார்த்து இரசித்தவண்ணம் இருந்தனர். அவள் முகத்தில் படரும் மயிரை அவன் மெல்ல வருடி பின்னே எடுத்துவிடுகின்றான். அவள் அதனை விரும்பாதவாறு கையைத் தட்டிவிடுகின்றாள். மேசையில் இருந்த ஒரு அப்பிள் பழத்தை கடித்துவிட்டு அவள் வைக்கின்றாள், அவன் அதனை எடுத்து மீதி கடிக்கின்றான். அவள் அததை தடுத்து பறிக்கின்றாள், அப்பிள் மேசையில் நழுவியபின்னும் அவர்களது விரல்கள் விலகாது ஒருவரை ஒருவர் தீண்டியவண்ணம் இருந்தது. இதுதான் வைரமுத்து சொன்ன காதலின் முதல்நிலையோ என எண்ணத் தோன்றியது. இரண்;டு கதிரையில் இருந்தவர்கள் இப்போ பாதிக்கதரையை காதலுக்கு வாடகைக்கு கொடுத்து விட்டார்கள். ஓவ்வொரு கதைக்கும் ஒரு முத்தம் கன்னத்தில் விழுந்த வண்ணம் இருந்தது. அவளும் அதனை ஏற்றுக்கொண்டு ஆனால் மகிழ்வை மறைத்துக்கொண்டு, மறுமுறைக்காக ஏங்கிக்கொண்டும் இருந்தாள்.

கன்னத்தில் இட்ட முத்தம் இப்போ சரியான இடத்தை வந்து சேர்ந்தது. இருவரும் எழும்பி வெளியே சென்றார்கள். உள்ளே சிகரட்குடிக்க அனுமதி இல்லை. எனவே பலரும் இப்படி எழும்பி வெளியே சென்று சிகரட்குடித்துவிட்டு வருவார்கள். ஆனால் இந்த ஜோடிகள் சிகரட்குடிப்பதில்லை. அப்படி என்றால் எதற்காக வெளியே சென்றார்கள்.

நான் மீண்டும் ஆட்டம் பாட்டம் நிகழ்வுக்குள் நுழைந்தேன். சற்ற நேரத்துக்குள் என்னுடன் வேலை செய்யும் சியான் தனிமையாக, சோகமா இருப்பதைப் பார்த்தேன். அவருக்கு வயது 64. இன்னும் இரு வருடத்தில் பென்ஷன் எடுக்கவுள்ளார். என்ன சீயான் என்று அவருடன் கதைத்தேன். ஏதோ ஒரு கவலை அவர் முகத்தைச் சிறைப்பிடித்திருந்தது. என்ன நடந்தது என்றேன். அவர் அழும் நிலைக்குச் சென்றுவிட்டார். 6 போத்தல் பியர் குடித்தமைக்கான 6 கோடுகள் அவரது மேசையில் உள் மட்டையில் போடப்பட்டு இருந்து. இவ்வளவும், உள்ளே சென்றபடியால் இவர் எதனையும் ஒளிக்காது எனக்கு சொன்னார். அவள் என்னைக் காசுக்காத்தான் விரும்புகிறாள். யார் என்றேன்! ரீனா என்றார். அட ரீனாவிற்கு வயது 33 தானே என்றேன். தனக்கும் தெரியும், ஆனால் அவள் வயது தடையில்லை என்கிறாள் என்றார். நான் காசுக்கு வயது என்ன தடை ஆனால்! காதலுக்கு நிச்சயமாகத் தடைதான் என்றேன். அவர் நான் இன்று சந்திக்க அவளை மறுத்துவிட்டேன் அதுதான் கவலையாக உள்ளது என்றார். அவரது மனைவி இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. தனிமையில்தான் இருக்கின்றார், துணை தேவைதான் அதற்கு 33 துணையாக இருக்குமா. நான் சிந்திப்பதற்கு முன் தொலைபேசி அவரது நெஞ்சுக்குள் மணி அடித்தது. நேரம் இரவு 3 மணி அவர் விறு விறு என்று யக்கெட்டை மாட்டிக்கொண்டு புறப்பட்டார். பின்பக்கம் பார்த்தால் ஒரு 26 வயதுதான் மதிக்கலாம். அவருடைய நடையில் உற்சாகம் இருந்தது. ஒன்று உறுதியகத் தெரிந்தது, இன்னும் 33 நிமிடங்களுக்குள் அந்த 33 இல் கரைந்துவிடுவார் என்று.

வெளியே சரியான குளிர், ஆனால் வியர்க்க, வியர்க்க முன்பு வெளியேறிய ஜோடிகள் வந்து அமர்ந்தனர். இப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது, அவர்கள் உண்மையில் கணவன் மனைவிதான். ஆனால் இருவருக்கும் ஏதோ உடல் போலும், இப்போ அது முடிவுக்குவந்து விட்டது.

இருவரும் உணவு ஒரு பிளேட்டில் எடுத்தார்கள். ஒன்றாகச் சாப்பிடார்கள்;;. ஒருவர் மாறி ஒருவர், ஒருவர் கடித்துவிட்டு வைத்தை மாறி மாறி எடுத்துக் கடித்தனர். ஜோடி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். என்று எண்ணிக்கொண்டேன். இப்போதான் இருவரும் வைன் ஒடர் பண்ணினார்கள். ஓன்று இரண்டு என்று பல கிளாஸ்கள் காலியாகின. பல செல்பி எடுத்துக்கொண்டார்கள்.

ஒரு முறை மட்டும் என்னிடம் போனைத் தந்து ஒருபடம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அமைதியாக அழகாக போஸ் கொடுத்தார்கள். உண்மையில் பொருத்தமான ஜோடிதான். நான் சொல்லவில்லை. படம் சொல்லியது.

நேரம் அதிகாலை 5 மணி. மெல்ல, மெல்ல, பாட்டி ஓய்வு நிலைக்கு வந்தது. அதிகமாக மது அருந்தியவர்கள் டக்சி பிடித்து வீடு சென்றனர். சிலர் தொலைபேசியில் வீட்டுக்கு அழைப்பு அனுப்பவிட்டுக்காத்து நின்றனர். நானும் வீடுசெல்வதற்காக புறப்பட்டேன். அந்த இளம் ஜோடியும் புறப்படத்தயாரானார்கள். ஏதோ உலக அழிவிற்கு முந்தி முத்தம்போல் வெறித்தனமாக இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டனர். நான் குடித்த வைன் கொடுத்த வெறி என எண்ணிக் கொண்டேன்.

இருவரும் வாசலில் வந்து நின்றனர். நான் படம் எடுத்துவிட்ட நட்பின் காரணமாக என்ன வைன் குடித்தபடியால் கார் ஓடமுடியாதா? டக்சிக்;கா வெயிட்பண்ணுகிறீர்கள் எனக் கேட்டேன்.

அவர்கள் சொன் பதில் என்னைத் தூக்கி வாரிப்போட்டது.

ஆம் அவள் தனது கணவனுக்காகவும், அவர் தனது மனைவிக்காவும் வாசலில் காத்து நிற்கின்றனர். நான் எனது காரை எடுக்கப் புறப்பட்டேன். அவளது கணவன் அவளை வந்து கட்டி முத்தமிட்டு அழைத்துச்செல்ல, இவன் தனது மனைவிக்கு கட்டி முத்தம் கொடுத்து அவளுடன் ஏறிச் செல்ல. நான் ஒருதலைக் காதலா அல்லது இருதலைக் காதலா எனக் குழம்பியவண்ணம் சென்றேன்.

என்ன பொருத்தம் இருவரையும் ஏற்றிச்செல்லும் வண்டியும் ரோயாட்டா ஜீப். பின்னே அந்த செப்பினி ரையர் பின் கதவில் பெரிதாகத் தெரிந்தது. அவர்கள் வாழ்க்கை எப்ப பஞ்சரானாலும் மறுவாழ்வுக்கு செப்பினி உடன் கைகொடுக்கும்.

- மாதவி
வெற்றிமணி (April 2016)

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு