மடமையைக் கொளுத்துவோம்!

வீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.

"இது என்ன பேப்பேஸ்?"

"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ"
அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.

நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.

"எங்கை.... பயணம்?"
வழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்"
கூறி முடிக்கமுன்,

"கூட்டமோ? யாழ்ப்பாணத்திலையோ? அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி"
மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.

"ஏன் மாமி? யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப் போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ?"

"சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப் போறனி எண்டு நல்லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி! குமர்ப்பிள்ளை... தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசியமோ, எண்டுதான் கேக்க வந்தனான். பரவாயில்லை. கேட்டது என் தப்பு. நீ போயிட்டுவாம்மா"
மாமியின் கிண்டல் பேச்சு ஆற்றாமையை மேலும் வளர்த்தது.

"அது... ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி. ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா."
நான் நறுக்கென்று கூறினேன்.

"இலக்கியம். பெரிய இலக்கியம். எங்களுக்குத் தெரியாத இலக்கியம்!... காலம் கெட்டுப் போச்சடி"
மாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.

"சரியா...ன லூஸ் மாமி!" எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

சிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"பாரடி! அந்தக் குமரியளை! யாரோடை கதைக்கிறது, எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல்... வாசலுக்கை...! காலம் கெட்டுப் போச்சடி..."

நான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் பெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினாள்.

அவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என்னவோ செய்திருந்தது. அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அந்தப் பெண்களுக்குத்தான்! இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது" எண்டு சண்டைக்கு வருகிறார்களே! மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

நான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் அருகில் சென்று ஏதோ சொல்ல, "ஸ்டுப்பிட்... ராஸ்கல்" என்று திட்டிக் கொட்டி விட்டு அவள் நடந்தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"யாழ்ப்பாணத்துக்குப் போறேன் அங்கிள்"

'எதுக்கு?' என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றார்.

'அப்பப்பா!' பார்வைகளைப் பர்த்தால் திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போலிருந்தது.

´என்ன மனிதர்கள் இவர்கள்? இந்த வீதியாலை எத்தனை ஆண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக்கும் ஆளாக வேண்டுமோ? இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ?'

என் மனம் என்னுள் அல்லாடியது.

நான் பஸ் ஸ்ராண்டை அடைந்த பொழுது, யாழ்ப்பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,

"ஹலோ" என்றார். திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே,

"ஆ... ஹலோ" என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.

"எங்கை... வெளியீட்டு விழாவுக்கோ?" நான் கேட்டதும்,

"ஓமோம், நீங்களும அங்கைதானே?" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் ´ஆம்` என்று தலையாட்டினேன்.

"இன்விற்ரேசன் வந்ததோ... அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ?"

"இன்விற்ரேசன் காட் வந்தது" நான் கூறிவிட்டு "விழாவிலை நீங்களும் பேசுவீங்களா?" - அவருடைய அருமையான மேடைப்பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.

'ம்... பேசச் சொல்லிக் கேட்டால் பேசுவன்.'

'ஆயத்தப்படுத்தாமல்... எப்பிடி உங்களாலை சட்டென்று பேசமுடியுது?'

அவர் மெதுவாகச் சிரித்து விட்டு என்னைப் பார்த்தார்.

"நீங்கள்... ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறிங்கள். பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ்சிடுது இல்லையா?... அது மாதிரித்தான் இதுவும். ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்."

"எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பலருக்கு மத்தியில பேச வராமல் மறைஞ்சு போயிடும்" நான் ஏக்கத்துடன் கூறினேன்.

"சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னால பேசுகிற போது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம்! அந்தப் பயம் இருக்கக் கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணுமெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையிலை பேசி முடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பேசுகிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒரு பயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாராமாக்கக் கூடாது. அதைச் சிம்பிளாக நினைக்க வேணும்." அவர் ஒரு ஆசிரியர் போல் புத்திமதி கூறினார்.

எனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

"சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்."

"ஐயையோ, எவ்வளவு பெரிய ஆட்களுக்கு முன்னால.. நான்... நான்..." நான் தயங்க,

"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, இன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை! நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ." அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.

"சரி, இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்." கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீங்கள்?" நான் புரியாமல் கேட்டேன்.

"இல்லை, என்ரை மனுசி சொல்லுவாள் ´நீங்கள் ஒரு ரீச்சரா இல்லா விட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்!` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா?" அவர் கூறியதும் சிரிப்பு வந்தது.

நான் சிரித்து விட்டுத் திரும்பிய பொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. ´யார் அது?` உற்றுப் பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்பவோ ஒருநாள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.

´ஏன் இப்படி முறைக்கிறான்?´ எனக்குப் புரியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.

பஸ், யாழ்ப்பாணத்தை அடைந்த பதினைந்து நிமிடங்களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்டபத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம்பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சச்சைக்குரிய விடயங்கள் நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் போழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணீரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த்தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளி வீசினார். என் அவதானம், பிசகாமல் அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது! அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய போதும் என் வியப்பு மாறாமலே இருந்தது.

இறுதியாக, "விரும்பியவர்கள் பேசலாம்" என்று தலைவர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினார். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தினார். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கி விட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டியது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலிதாகச் சிரித்தார்.

விழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,

"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்தான் இருந்தது" அவர் புன்னகையுடன் கூறி விட்டுத் தனக்கு அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பஸ் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டு வாசலில் அண்ணா நின்றிருந்தார். அவர் முகம் அசாதரணமாக இருந்தது.

"இப்ப... என்ன நேரம்?"
அவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன்.

"ஆ... ஆறரை"
அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத்தில் நாக்குளறியது.

"விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது?"
குரலில் அதே கடுமை.

"ஐந்தே காலுக்கு"
நான் உள்ளே போக எத்தனித்தேன்.

"நில்லடி, போகும்போது தனியாத்தான் போனியா?"
குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.

"தனியாத்தான் போனனான்..."
புரியாமல் விழித்தேன்.

"பஸ்சுக்குள்ளை... பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தவன் ஆரடி?"

"அண்ணா, அவர்... அவர்... எழுத்தாளர் சதுரா. எதிர்பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்."

´பளார்` என்ற ஓசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலை தடுமாறினேன்! கன்னம் ´பக பக` வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதிலாக கோபம் பீறியது!

"செய்யிறதை நியாயத்தோடை செய்யுங்கோ"
நான் கத்தினேன்.

"எனக்கு... நீ நியாயம் சொல்லுறியா?"
மீண்டும் ´பளார்` என்ற ஓசையுடன் கன்னம் அதிர்ந்தது! இப்போ ஆற்றாமையில், வலியில் அழுகை வந்தது.

"எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி... அப்பிடி யென்ன கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண்டும் போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத்துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக்கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.

"மிக மிக எளியவன்" என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.

"என்னடி கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் வெடித்தார்.

"ம்... என்ன... கதைச்சோமோ? ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்" சட்டென்று ஆடிப்போன அவர் விழி பிதுங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.

"என்ன துணிச்சலடி உனக்கு...?"
அவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக் கொண்டேன்.

... "யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவிதமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை நாயாய் அடிக்கிறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை? உங்களுக்கு உங்கட தங்கச்சியைப் பற்றித் தெரியேல்லையே? என்னைப் பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே? என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே? இப்ப நான், பெண்ணாய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண்டும் வேதனைப்படுறன்"

நான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.

இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக் கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத் தடவி விட்டேன். மனம் இலேசாகிக் கொண்டு வந்தது.

§§§§§

மாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசையில் வைத்து விட்டு, "சுஜா, கதை நல்லாயிருக்கு, ஆனால் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கிறியே?" என்றார்.

"ஏன் மாமா? பெயர் நல்லாயில்லையா? அப்ப... வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு." நான் கூறியதும் அவர் சிரித்தார்.

"அது சரி, இப்ப எங்கேயோ போறாய் போல கிடக்குது" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.

"யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா... அதுதான்..." நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

"சுஜா, நீ இப்பிடி இலக்கியக் கூட்டம்... இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக்கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ... வயசுக்கு வந்த பிள்ளை! ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்." மாமா போய்விட்டார்.

நான் சிலையாக நின்றேன்.

சந்திரா இரவீந்திரன்
1986


ஈழநாடு - 1986

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு