புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும்

“சும்மா கீழ இறக்கிவிடுங்க பாப்பம். தெருவால போற சனம் என்ன நினைக்குங்கள் . - கல்யாணம் முடிச்சு பத்து வருசமாகிட்டடுது இப்பதான் புதுமாப்பிள பொம்பிளைக்கு நடிக்கினம் - எண்டு சொல்லப் போகுதுகள்" என்றபடி அன்னக்கிளி கணவனின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் . ஆனால் அவன் குண்டுக் கட்டாக அவளை தூக்கிக் கொண்டு வந்ததால் அவளால் முடியவில்லை.

“விளையாடப் போன பிள்ளைகள் வரப் போகுது இறக்கி விடுங்க பாப்பம்” என சற்று பலமாக கூறியது மாடுகளைப் பட்டிக்கு சாய்த்துக் கொண்டு வந்த அன்னக்கிளியின் கணவனின்; தந்தை மருதநாயகத் தாருக்கு  கேட்டு விட்டது .

 திரும்பிப் பார்த்தார்.  மகன் மருமகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் போவது தெரிந்தது. சில மணித்தியாலயங்களுக்கு முன் இதே மருதநாயகத்தார் மாடுகளை தேடி போன போது மருமகள் அன்னக்கிளி கிணற்றடி தென்ன மரத்தின் கீழ்  நிலத்தைக் கிண்டிக்கொண்டு இருந்தது அவரின் ஞாபகத்தில் வந்தது.

 'ஏன் இப்படி தனியே இருக்கிறாள்..? ஏதாவது வருத்தமோ...? சத்தி எடுக்கிறாளோ...? எப்போதும் சுறுசுறுபபாக எதையாவது செய்து கொண்டு இருப்பாளே என்ன நடந்தது ' என யோசித்து விட்டு 'வேண்டாம் ஏதும் குடும்பத்துக்குள்ள பிரச்சனையாகவும்  இருக்கலாம் நாம் ஏன் தலையை நுளைப்பான்” என எண்ணி கொண்டு பார்க்காதவர்  போல சென்றுவிட்டார் .

பட்டிக்கு விட்ட நெத்திச்சுட்டி  நாம்பன் கன்றுத் தாச்சி மாட்டின் வாலுகிடையில் மூக்கை நுளைத்த படி துரத்திக்கொண்டு சென்றது. அதன் பின்னால் மேலும் இரு நாம்பன் மாடுகள் ஓடியது. பசு மாடு திரும்பி  இடிக்க வந்ததும்  நாம்பன்கள் வேறு திசையில் ஓடி விட்டது.

மருதநாயகத்தார் பாலில்லா மாடு சிலவற்றை தவிர எல்லா மாடுகளையும் பட்டிக்கு சாய்த்துக்கொண்டு வந்தார் . அந்த கன்றுத்தாச்சி மாடு நடக்க முடியாமல் கடைசியாக சென்று கொண்டு இருந்தது. அதன் பின்னால் மெதுவாக மருதநாயத்தாரும் நடந்தார்.

' பாவம் நிறைமாதக் கற்பிணி மாடு எவ்வளவு வேதனையை சுமக்கும் இப்படித்தானே வள்ளியும் என்  பிள்ளைகளை சுமந்தாள் . அவள் என்னுடன் வாழ்ந்த இந்த முப்பது வருடத்தில் 15 வருடத்திற்க்கு  இப்படித்தானே இருந்தாள். 'நான் ஒரு முறையேனும் அவளை தூக்கவே இல்லையே என் மகனுக்கு தோன்றியது எனக்கு ஒருபோதும் தோன்றவில்லையே  என ஒரு ஆசை பிறந்தது .  " இதென்ன  65 வயதில் எனக்கு ஞானம் பிறக்குது ?. " என வியந்தார் ' இப்பயாவது பிரந்திச்சே 'என எண்ணியபடி இன்று எப்படியாவது அவளை தூக்கி அமர்க்களப்படுத்தி விட வேண்டும் என்றபடி . பால்குடி மறந்த ஒரு முதியான் கன்றை பிடித்து தூக்கி பார்த்தார் . அது காலை இடறி அவரையும் விழுத்தி தானும் விழுந்து எழும்பி ஓடியது .

மருதநாயகத்தார் கடுக்கனாரின் கடைசிப் பிள்ளை ஆனால் மிக பிரயாசமானவர் அவரது மனைவி வள்ளியம்மை பெற்றோருக்கு மூத்த பிள்ளை அவளின் பின் நான்கு ஆண் பிள்ளைகள் ஆசையால் வள்ளியம்மையின் தந்தை  நில புலம், மாடு மனை என நன்றாக சீர்வரிசை செய்து வள்ளியம்மையை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். பச்சையும் பழமும் குறைவில்லாத வவுனியாவின் பச்சை முத்தான செட்டிகுளம் - பாவற்குளம் பிரதேசத்தில் . அவர்களின் தாம்பத்தியம் ஆரம்பமானது.

திருமணமாகி முதல் வருடமே  மகள் சுதா பிறந்தாள். தொடர்ச்சியாக மூன்று பிள்ளைகள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் திருமணமாகி ஐந்து வருடத்திற்குள் பிறந்தனர். ஒழுங்காக மனைவியிடம் பேசவும் முடியாமல் போனது. ஆனால் மனைவி வள்ளியம்மை வீட்டு வேலை எதையும் இவரிடம் சொல்லாமல் தானே முழுவேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார் .

மருதநாயகத்தாரும் மனைவிடமே முழுக் குடும்பப் பொறுப்பையும் விட்டிருந்தார் . அவரின் பொழுது கமத்துடனே கழிந்தது. வீட்டில் ஆடு, மாடு, கோழி, என ஒரு பக்கம் பால், முட்டை, மோர், தயிர் என தேவையான எல்லாமே வீட்டிலேயே உற்பத்தியானது.
ஒரு போதும் வீட்டில் நெல்லுக்கு குறையே இருக்காது. மா, பிலா, தென்னை, வாழை, புளி என ஒரு புறம் தண்ணியே கூட ஊத்தி வளக்காத பனையில் இருந்து கிழங்கு ,ஒடியல் , பினாட்டு ,பாய் ,பெட்டி ஏன்  கள்ளுக்கு கூட குறைவில்லை அங்கே .
வீடு செல்லச் செழிப்பாகவே இருந்தது சும்மா இருப்பாரா மனுஷன் , இருக்கத்தான் முடியுமா ?  நான்கு பிள்ளைகளைத் தொடர்ந்து மேலும் பத்துப் பிள்ளைகளை பெற்று எடுத்தாள் சீமாட்டி.
ஒரு கட்டத்திற்கு மேல்; பிள்ளைகளே பிள்ளைகளை குளிப்பாட்டி ,உடுப்பு தோய்த்து ,சாப்பாடு சமைத்து, ஊட்டி விடும் நடைமுறை உருவாகியது  .

மருதநாயகத்தார் மனைவியை எட்டிப் பார்க்க வேண்டும் என்றாலும் பிள்ளைகளை விலத்திக் கொண்டே பார்க்க வேண்டும்.  இந்த நிலையில் மனைவியை - இப்போது மகன் மருமளைத் தூக்குவது போல் - எப்படி தூக்குவதும் கொஞ்சுவதும் மனமிருந்தும் உடனிருக்க முடியாமல் வருடங்கள் கடந்துபோனது .

அவருக்கும் நெல்லு ,வயல் , மாடு , ஆடு என பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. தானும் தன் பாடும் என இருந்து விட்டார். பாவற்குளத்தில் மருதநாயகத்தை தெரியாத ஆட்கள் இல்லை. ஆனால் மருதநாயகத்தில் குரலை தெரிந்தவர்கள் அதிகம் பேர் இல்லை . அவர் பேசுவது அவருக்கே கேட்குமா என்பது சந்தேகமே . நன்றாக தலையை மட்டும் ஆட்டத்தெரிந்து வைத்திருந்தார்.  

ஆனால் மனைவி வள்ளியம்மை அவ்வாறில்லை . பொது இடங்களுக்கு சென்றால் அவரை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும் . கலகலவென பேசுவார்,  கை தேர்ந்த நாட்டு வைத்தியக்காரி. தாலாட்டு பாட்டு அவர் பாட  கேட்டால் பெரியவர்களுக்கே தூக்கம் வந்துவிடும். பதின்நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர் என பெயரெடுத்தவர் . மிகவும் பண்பாணவர்.  மற்றவரின் நிலை அறிந்து உதவி புரிவார், மாரியம்மன் தாலாட்டு பாடுவதில் மகாவித்தகர். ஊரில் யாருக்காவது அம்மன் நோய் வந்து விட்டால் இவரிடம் கொண்டு வந்து விடுவார்கள். அந்த மாரியம்மன் தாலாட்டில்  ' யார் யார் பாடலைக் கேட்க வேண்டும்  யார் யார் கேட்கக்கூடாது ' என்ற ஒரு பட்டியல் இருக்கும்.

“ஒரு பிள்ளைப்பெற்ற  ஊதாரி கேளாதே பத்துப்பிள்ளை பெற்ற பத்தினியே கேட்டிடுங்கோ” என ஒரு வரிவரும் அதை அவர் ராகத்தோடு  மிடுக்காக அந்தபாடலாகவே கலந்து பாடுகையில்   கேட்பவர்களின் உடல் மனம் இரண்டும் சிலுர்த்துவிடும் .
அப்படி ஒரு தெய்வீக பண்பு அமையப் பெற்றவர் வள்ளியம்மை. ஆனாலும் என்ன இப்போது மருதநாயகத்தாரும் பத்தோடு ஒன்றாக ஆகி விட்டார். ஒருபிள்ளை சாப்பாடு போட்டுச் கொடுக்கும் இன்னொரு பிள்ளை  கையில் துவாயுடன் கை துடைப்பதற்கு கொடுக்க தயாராக இருக்கும். மருதநாயகத்தார் மனைவியிடம் ஏதாவது வலிய கேட்க அங்கே இடம் இருக்காது. அப்படியாக வள்ளியம்மையின் பிள்ளை வளர்ப்பு இருந்தது. ஏதாவது உடல் வருத்தம் வந்தால் தான் மனைவியின் கையால் மருந்து கிடைக்கும்.

இவை எல்லாவற்றையும் அவரால் இப்போது தான் அமைதியாக அசைபோட முடிந்தது . வீட்டில் இரு ஆண் பிள்ளைகள் மட்டுமே இருக்கிறார்கள் . அவர்களும் வீட்டில் தங்குவதில்லை காலை போய் மாலையே வருவார்கள். மீதி அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தாகி விட்டது. வீட்டில் இவரும் மனைவியுமே மிச்சம்.  இப்போதாவது மனைவியை ஒரு முறை தூக்கி விட வேண்டும் இல்லை என்றால் இனி எப்போதும் முடியாது என  அங்கலாய்த்தார் .
 மனைவி எதிர்பாராத வேளையில் , அல்லது ஒரு அதிர்ச்சியை கொடுத்துவிட்டு, அல்லது சின்னதாக ஒரு சண்டை போட்டு விட்டு சமாதானம் செய்து கொள்வதாக ஒருமுறை தூக்கி விட வேண்டும். என தீர்மானித்துக் கொண்டார் . ஆனால் எப்படி எதை வைத்து சண்டை போடுவது என்றுதான் தெரியவில்லை.

மாடுகளை பட்டியில் அடைத்தார். பால் கறக்க வேண்டிய பசுக்களின் கன்றுகள் கோடியில் கட்டப்பட்டு இருந்தது. ஒவ்வொன்றாக அவிட்டு விட்டார். அவற்றுக்கு ஒரு நானும் இல்லாத ஆனந்தம் நன்றாக முலையை முட்டி பால் குடித்தன . அவற்றை ரசித்தப்படி நின்றார். வள்ளியம்மை பால் கறக்கும் வாளியுடன் வந்தார். கன்றுகள் எல்லாம் பாலை குடித்து விட்டு விழையாடிக்கொண்டு இருந்தன.

"என்னப்பா எல்லா கண்டும் அவிட்டு  நிக்குது ...? ”என்றார் வள்ளியம்மை வாயில் கையை வைத்தபடி .   

மருதநாயகத்தார் மனதுக்குள் சிரித்துக்கொண்டு  “கால்ல ஒரு முள்ளு குத்திப்போட்டுது ஏலாத காலோட அதுகளை இழுத்து கட்ட முடியாமல் போயிற்று ஒவ்வொண்டா அவிட்டு இழுத்துப் பாத்தன் முடியல்ல ” என்றார் ஒரு திட்டத்தோடு.

“ அப்ப நாளைக்கு தயிரும் இல்லை , மோரும் இல்லை  வாறதுகளுக்கு நான் என்ன சொல்லுறது.. ஏனப்பா என்னை எண்டாலும் கூப்பிட்டிருக்கலாம் தானே ?"

“அப்ப என்னை விட நீர் தைரிய சாலியா ”

“என்னப்பா ஒரு நாளும் இல்லாத மாதிரி இண்டைக்கு நாக்கு நீளுது... கள்ளு மண்டிப் போட்டன்  எண்டு சொல்லுங்கோ.." என்றார் வள்ளியம்மை பால் செம்பை குலுக்கி அதனுள் இருந்த முலைகழுவ கொண்டு வந்த  தண்ணியை நிலத்தில் ஊற்றியபடி .

“உண்ணாண கள்ளு மணக்குதா...எண்டு ஒருக்கா கிட்ட வந்து வாயை மணந்து பாரும்  ?" என மனைவியின் மூக்குக் கிட்ட சென்று ஊதி காட்டினார்.

 “அதுக்கேன்  முகத்துக்கிட்ட வந்து ஊதுறியள் தள்ளி நில்லுங்கோ” .

“ஏன கிட்ட வந்தா என்ன செய்வீர்?”.

“கையில் இருக்கிற  செம்புதான் வரும். வர வர நல்லாத்தான் குமரனுக்கு நடிக்கிறியள்”

“எங்க உம்மால முடிஞ்சால் ஒருக்கா எறிஞ்சுதான் பாருமன் " என்றார் மருதநாயகத்தார் நெஞ்சை நிமித்தி நின்றபடி .
 வள்ளியம்மை பால் கறக்க கொண்டு வந்த வாளியை கிழே வைத்து விட்டு  கையில் இருந்த தண்ணிச் செம்பை மருதநாயகத்தாரை நோக்கி எறிந்தார். அது குறி தவறி எங்கோப் போய் விழுந்தது.

“செம்பால் எறியிற அளவுக்கு உமக்கு துணிச்சல் வந்திட்டுது இரும்வாறன் உந்தக் கையை இப்ப முறிக்கிறனா இல்லையா எண்டு பாரும்”

"என்ர கையை முறிக்கற அளவுக்கு உமக்கு கை நீண்டு போயிற்றோ ...?  என்னில தொடும் அதுக்குப் பிறகு நடக்கிறதப் பாரும்” என்றார் வள்ளியம்மை.

மருதநாயகத்தார் பலமாக ஓங்கி மெதுவாக கன்னத்தில் அடித்தார். அவர் நினைத்தது போலவே வள்ளியம்மை புறு புறுத்தபடி கோவித்துக் கொண்டு  சமயல் கட்டுக்குள் போய் இருந்து விட்டார்.

மரியநாயகத்தார் மெல்ல குசுனி அடைத்திருந்த  செத்தையை நீக்கி   எட்டிப் பார்த்தார் . உள்ளே அவரின்   14 பிள்ளைகளை  சுமந்து பெற்ற  அன்பிற்கு பாத்திரமான மனைவி  வள்ளியம்மை அழுது கொண்டு இருப்பது தெரிந்தது.

' மருமகள் நான் மாடு சாய்க்கும் வரை தனிய அழுதிருக்கிறாள்   மாமி கொஞ்ச நேரம் எண்டாலும் அழட்டன் ' என விட்டு விட்டு எறிந்த செம்பை எடுத்து கழுவினார் .

பின் கோடியில் மறைவாக நின்ற கன்றை அவிட்டு சற்று  ஊட்டியபின் இழுத்துக் கட்டி விட்டு செம்பு நிறைய பாலைக் கறந்து கொண்டு சமயல் கட்டை நோக்கி நடந்தார் . பாலை மனைவி முன் வைத்து ஆச்சரியப்படுத்திவிட்டு வள்ளியம்மையை தூக்கி வீட்டை ஒரு முறை சுற்றி வர வேண்டும் என வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.
சமயல் கட்டை திறந்து உள்ளே சென்றார் மனைவி சுவரோரமாக - முகத்தை சுவர்ப்பக்கம் திருப்பியபடி படுத்திருந்தார். பாலை அருகில் வைத்து விட்டு “ வள்ளி… வள்ளி.. " என்றார் . வள்ளியம்மை வேண்டும் என்றே பேசாமல் மௌனமாக கிடந்தார். மீண்டும் வள்ளி என்றபடி எட்டி முகத்தைப் பார்த்தார். அழுது  நிதிரையாகிவிட்டார் .

"இத்தனை வருடம் வாழ்ந்தும் இவ்வளவு பிள்ளைகளை பெற்றும் இறுதிவரை நீ என்னை புரிந்து கொள்ளவே  இல்லையடி வள்ளி  " என கலங்கினார் .

 இதுக்கெல்லாமா எலிமருந்து சாப்பிடுவார்கள் என பிள்ளைகளும் திகைத்தார்கள் .  இரண்டு நாட்களின் பின்னர்   அவரின் வள்ளியம்மையை  தூக்கினார் . தனிய இல்லை ஊருடன் சேர்ந்து சுடலைடை நோக்கி செல்ல . 

- பசுந்திரா சசி 

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு