பேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை)

அது ஒரு சனிக்கிழமை. எனது தங்கை கிளாரா எனது காதுக்குள் குசுகுசுத்தாள்.
'இண்டைக்குப் பின்னேரம் அம்மாவும், அப்பாவும் வெளியிலை போகினம். நாங்கள் இரண்டு பேரும்தான் வீட்டிலை தனிய..'

'உண்மையாக..?'

'இண்டைக்கு ரீவீயிலை ஒரு பேய்ப்படம் வரும். நாங்கள் அதைப் பார்க்கலாம்' எனக்குப் பயங்கர சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் எனக்குப் பேய்ப்படம் என்றால் நல்ல விருப்பம்.

'உனக்குப் பயமில்லையோ?'

'கொஞ்சம் பயம். உனக்கு..?'

எனக்கும் கொஞ்சம்தான் பயம்.

அதுக்குப் பிறகு நாங்கள் எப்போது அம்மாவும், அப்பாவும் வெளியில் போவார்கள், எப்போது படம் தொடங்கும் என்று காத்திருந்தோம். அவர்கள் போவதற்கு கன நேரம் எடுத்தது. போதாததற்கு வெளிக்கிடும் போது அம்மா எங்களுக்குச் சொன்னா

'நாங்கள் போன உடனை நீங்கள் இரண்டு பேரும் ரீவியைப் போட்டிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேல்லை. உடனை கட்டிலுக்குப் போய்ப் படுத்திடோணும். விளங்கிச்சுதோ!'

'ஓம், அம்மா' நாங்கள் வாக்குறுதி கொடுத்து விட்டு உடனேயே கட்டிலுக்குப் போய் விட்டோம். அம்மாவும், அப்பாவும் வெளியிலே சென்று கதவைச் சாத்தும் சத்தத்துக்காகக் காத்திருந்தோம். கார் புறப்படும் சத்தம் கேட்டதும் கட்டிலிலிருந்து குதித்தோடிச் சென்று தொலைக்காட்சியைப் போட்டோம்.

சோபாவில் நல்ல வசதியாக அமர்ந்து கொண்டோம். நான் கிளாராவின் கையைப் பிடித்துக் கொண்டேன். அவளது கையைப் பிடித்திருந்தால் வெள்ளைத் துணி போர்த்திய பேய், பேய்க்கோட்டையின் வழியாக வரும் போது எனக்குப் பயம் குறைவாக இருக்கும்.

எனக்கு ஒரு வயதான பேயைப் பிரத்தியேகமாகப் பிடிக்கும். அது ஒரு காலில் துள்ளிக் கொண்டு வரும். எப்பவும் ' ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ..“ என்று கத்தும்.

படம் முடிந்ததும் கிளாராவும் ஒரு காலில் நின்று துள்ளிக் கொண்டு ' ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்' என்று கத்தினாள்.

'நீ ஒருக்காலும் பேயாக முடியாது. நீ பேயில்லை.' நான் சொன்னேன்.

'ஏன் அப்பிடிச் சொல்லுறாய். நானும் அந்தப் படத்திலை வந்த கிழட்டுப் பேய் போல ஒற்றைக்காலிலை துள்ளுறன்'

'ஓம், ஆனால் அந்தப் பேய் மாதிரி உனக்கு வெள்ளைத்துணி போர்த்தியில்லை.'

நான் அப்படிச் சொன்னதும் கிளாரா தனது அறைக்குள் ஓடிச் சென்று தனது படுக்கை விரிப்பைத் தலையில் போட்ட படி திரும்பி வந்தாள்.

'ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்'
என்னைக் கலைத்துக் கலைத்துப் பயப்படுத்தினாள்.

கிளாரா ஒரு பேய் என்றால், நானும் பேயாக வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. உடனேயே எனது அறைக்குச் சென்று எனது படுக்கை விரிப்பை இழுத்து எடுத்து எனக்கு மேலால் போர்த்திக் கொண்டு வந்து கிளாராவின் மேல் விழுந்து 'நானும் ஒரு பேய். நானும் ஒரு பேய்' என்றேன்.

இப்போது அவளுக்குப் பயம் பிடித்து விட்டது.
'உப்பிடிக் கத்தாதை' என்று கத்தினாள்.

நான் விடவில்லை.
'ஊ... ஊ.. ஊ..கூ.. ஊ..ஹா..கூ.. நான் ஒரு பேய்'

'நீ என்னைப் பயப்படுத்துறாய்'

'ஓம், ஏனெண்டால் நான் ஒரு பேய்'

இப்படியே நானும் கிளாராவும் நீண்ட நேரமாக வீட்டுக்குள் அப்படியும், இப்படியுமாகத் ஒற்றைக் காலில் துள்ளிக் கொண்டு ஒருவரையொருவர் பயப்படுத்திக் கொண்டு திரிந்தோம். இதற்கிடையில் இரண்டு பூச்சாடிகளை உடைத்தும் விட்டோம். தலையை மூடிப் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியினூடாக எங்களால் ஒன்றையும் சரியாகப் பார்க்க முடியாதிருந்தது.

எங்களுக்கு எங்களைக் கண்ணாடியில் பார்க்க விருப்பமாக இருந்தது.
எப்படி?

'எனக்குத் தெரியும்“ கிளாரா சத்தமாகச் சொன்னாள். 'நாங்கள் இந்தத் துணியில் எங்கடை கண்களுக்கு அளவாக இரண்டு துவாரங்கள் போட்டால், உண்மையான பேய்கள் போலவே காட்சியளிப்போம்.'

'நல்லது. அதைச் செய்வோம்' நான் சொன்னேன்.

ஒரு கத்தரிக்கோலால் நாங்கள் இரண்டு, இரண்டு துவாரங்களைப் படுக்கை விரிப்புகளில் வெட்டினோம். இப்போது உண்மையிலேயே நாங்கள் பேய்கள் போலவே காட்சியளித்தோம். எனக்குக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அம்மாவும், அப்பாவும் படுக்கை விரிப்பில் உள்ள துவாரங்களைக் கண்டால் என்ன சொல்வார்களோ..!

கிளாரா சொன்னாள் 'பயப்படாதை. நான் அதை ஒருத்தருக்கும் தெரியாமல் மறைத்துத் தைத்து விடுவேன்' என்று.

நாங்கள் தொடர்ந்தும் உண்மையான பேய்களாக நடுநிசியில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால் துவாரங்களை அடைத்துத் தைக்க முன்னரே, படுக்கை விரிப்பால் தலையை மூடிப் போர்த்திய படி எப்படியோ சோபாவில் நித்திரையாகி விட்டோம்.

அப்பாவும், அம்மாவும் வீடு திரும்பிய போது நாங்கள் அப்படியே நல்ல நித்திரையாக இருந்தோம்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்வதாக இல்லை. ஆனால் இன்றைக்கும் எனது பின் பக்கத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் சந்திரவதனா
10.10.2011

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு