விருந்தாளிகள்

புலம்(பல்)

தொலைபேசி கிணுகிணுக்கிறது.

ஆரது இந்த நேரம்...? ஞாயிறும் அதுவுமா...?
நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.
முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.

"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"

இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"

"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."

"எந்த லாகரிலை...?"

"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"

ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு சொல்லி, செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?

"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "

"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."

"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."

"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "

"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"

"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."

என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.

" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."

அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.

"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."

"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"

விடமாட்டான் போலையிருக்கு.

"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"

"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."

அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?

"சரியப்ப வாங்கோவன்"

"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"

தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.

"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."

செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..
"ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனீரோ..?" எண்டு ஒரு தரம் சினந்து..
"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..
அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.

செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புகளை விரித்துப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டு "வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.

"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"

"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ. "

செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து கிளாசுகளையும் கொண்டு வந்து விட..

"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க,
செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று, கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.

இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க, ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புளுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடியது.

"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.

"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "

"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "

"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "

"ஒரு surprice ஆ இருக்கட்டுமெண்டுதான்..."

ம்... ம்... surprice இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.

றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து, அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, துடைத்து, அடுக்கி, குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.

இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே.

செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.

சந்திரவதனா
யேர்மனி
10.9.2004


பிரசுரம் - திண்ணை - 29.10.2004
Comments: Post a Comment

 

Comments

அன்பான சந்திரவதனாவுக்கு

திண்ணையில் தங்கள் கதைகள் படித்தேன்.

'நிலவுக்கு பயந்து...........'
வெகு யதார்த்தம். பாலியல் இம்சைகள் எந்தத் திசையில் இருந்து வருமென்று கூறமுடியாத ஒரு உலகம் இது. All your assumptions are Possible.

விருந்தாளிகள் கதை பிடித்திருந்தது.
ஒரு பக்கம் முன் அறிவிப்பு இல்லாமல் வந்து உயிரை வாங்கும் விருந்தினர் படை. செண்பகமக்காவின் கஷ்டம் புரிந்தும் ஒரு உதவியும் பண்ணாமல் பியருடன் மகிழ்ந்திருக்கும் கணவன். நல்ல சித்தரிப்பு.

"என்ன கன ஆக்களோ?" என்ற செண்பகமக்காவின் அச்சமும் "எங்கேயெண்டாலும் றெஸ்ரோறண்டிலை பார்த்துச் சாப்பிட்டிட்டு போறதுக்கு இஞ்சை ஏன்வந்து பிராணனை வாங்கிறாங்கள்?" என்ற நெட்டுயிர்ப்பும் அவரின் வீட்டுப்பக்கமே யாரையும் இனிமேல் பார்க்கப் பயப்படுத்தும்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ஏன் உங்கள் படைப்புக்களைத் தொகுத்து ஒரு நூலாகப் பார்க்கும் ஆசையின்றி இருக்கிறீர்கள்?

நட்பார்ந்த
பொ.கருணாகரமூர்த்தி

Posted by ponniah karunaharamoorthy, Germany Date: Tue, 7 Dec 2004 07:01:07


Dear Chandra

Excellent. I enjoyed reading this.

N. Swaminathan
Los Angeles
30.10.2004

Posted by N. Swaminathan,Los Angeles, Date: Fri, 29 Oct 2004 19:33:31 -0400


Vanakam

Ithu Suresh. Naan Thinnai moolam ungaludaya sirukathi "Virunthaligal pulam(bal)" padithen. Enaku mihavum pidithirunthathu. ungaluku ennoda Valthukkal. Ningal Innum kathaihal vaithirunthal enaku anuppavum.

Anbudan...
Suresh
29.10.2004

Posted by Suresh Date: Fri, 29 Oct 2004 04:50:21 -0700

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு