நாகரீகம்

 "என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"

"ஓம் நான் போடுறேல்லை."

"என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்..! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே..!"

அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.

நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.

நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.

இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று யேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ..! என்றிருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும் தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும் பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.

அவள் சற்று சங்கடத்துடன் "இவ யேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா." என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும் சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் "பஞ்சப் பிரதேசத்திலையிருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்." என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.

பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம். இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.

"ம்.... வைன் போலை இருக்கு." என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.

"ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.

"சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை."

அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.

நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ..!!
"சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை." சமாளித்தேன்.

"இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம். அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்."

ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரீகமோ..? நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.

சந்திரவதனா - 12.3.2003

Post a Comment

 

Comments

அற்புதமான சிந்தனை..
யதார்த்தத்துடனான முரண்பாட்டை வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

இராஜன் முருகவேல் 30.3.2003


-----------------------------------------------------------------------

 

நாகரீகம் குட்டிக்கதை-எழுதியவரின் பெயரைப் பார்ப்பதற்கு முன் ஆரம்பத்தில் இருந்து வாசிக்கும்போதே இது சந்திரவதனா எழுதியதாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டேன். உருப்படியான கருப்பொருட்களை எடுத்து கதை புனைபவர் அவர். நாகரிகம் என்பதை தங்களுக்கேற்ற விதமாக வரைவிலக்கணப்படுத்துகின்ற மாந்தர்களை சற்று நிறுத்திவைத்து சிந்திக்க வைக்கக்கூடிய கதை. எங்கோ ஒரு கவிதை வரியில் பார்த்த ஞாபகம்-நாகரிகம் அடைந்த குரங்கு மனிதன் என்றால். . . நாகரிகம் அடைந்த மனிதன் குரங்கு தானா? புரியவில்லை...
சந்திரவதனாவுக்குப் பாராட்டுக்கள்.

ம. வதனி - 30.3.2003


-----------------------------------------------------------------------

 

வணக்கம் சந்திரவதனா அக்கா,

நாகரீகம் என்னும் உங்கள் குட்டிக்கதை நன்று.
கலாச்சாரம் - பண்பாடு - நாகரீகம் என்னும் மூன்றும் ஒன்று எனப்பட்டாலும்,
மூன்றும் வெவ்வேறு பொருளுணர்ந்தே கூறப்படுகிறது. அதுபுறம் இருக்கட்டும்...

உங்கள் கதையில் குறிப்பிட்டிருந்த வகையினரே தமிழரில் பெரும்பான்மையினர். உலகம் எங்கெனும் பரவிய தமிழர் உணர்ந்து கொண்ட நாகரீகம் இதுதான்.

வாழ்த்துக்கள்.

நன்றி

நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்

இளைஞன் - 3.4.2003


------------------------------------------------------------------

 

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு