விடை கிடைக்காத கேள்விகள்

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது.
காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.

வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது. மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.

றிசெப்ஷன் அவர்கள் வீட்டில் - லண்டன் பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் அவளுடைய அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் மாப்பிள்ளை வந்தார். பாரிஸ் மாப்பிள்ளை. முன்பக்கம் வழுக்கைத் தலையுடன் மாநிறம் கொண்ட அவரைப் பார்த்த போது அடக்கமாகத் தெரிந்தார்.

சிரிப்புகள் வரவேற்புகள் முடிந்து சட்டப்படி கல்யாணம் எழுத மேசையில் அமர்ந்த போதுதான் அழகான தங்கப் பதுமை போன்ற மணப்பெண் அந்தத் தட்டை ஏந்தி வந்தாள். அதில் கட்டுக் கட்டாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது பணம்.

எனக்கு அதைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே மணப்பெண்ணின் தாயிடம் சென்று
"மாமி..! என்ன காசு.. அது? ஏன்...?" என்று கேட்டேன்.

அதற்கு மாமி
"என்ன பிள்ளை இப்பிடிக் கேட்கிறாய். சீதனம்தான்." என்றா

"ஏன் மாமி சீதனம் குடுக்கிறியள்?"

"அவரைத் தாயவை கஷ்டப் பட்டுப் படிக்க வைச்சவையாம்." மாமி இயல்பாய் சாதாரணமாய்ப் பேசினாள்.

"ஏன் மாமி உங்கள் பெண்ணை மட்டும் நீங்கள் கஷ்டப் படாமல் சுகமா வளர்த்தனிங்களோ..? காசு செலவழிக்காமல் படிப்பிச்சனிங்களோ..?" என்று கேட்க வந்த வார்த்தைகளை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பெற்றோல் ஸ்டேசன் அண்ணனைப் பார்த்தேன்.

அவன் அப்பாவியாக மணமகன் அருகில் நின்றான்.
அந்தப் பணம் அவன் வியர்வை.
எத்தனை இரவுகள் அந்தப் பணத்துக்காக அவன் நித்திரையைத் தொலைத்திருப்பான்.
எத்தனை தடவைகள் பனியில் கால்கள் புதைய குளிரில் உடல் நடுங்க ஓடி ஓடிப் போய் வேலை செய்து பணத்தைச் சேர்த்திருப்பான்.
இன்னும் எத்தனை கஸ்டங்களை அனுபவித்திருப்பான்.

அதை வாங்க பாரிஸிலிருந்து வந்த இன்னொருவனுக்கு எப்படி மனசு வந்தது?
விடை கிடைக்காத கேள்வி எனக்குள்ளே..!

சந்திரவதனா
யேர்மனிComments: Post a Comment

 

Comments

சீதனம் என்ற கருவை வைத்து எழுதப்பட்ட இந்தச் சிறுகதைக்கு இடப்பட்ட "விடை கிடைக்காத கேள்விகள்" என்ற பெயர் பொருத்தமானது தான். பனியிலும், குளிரிலும் கஸ்டப்பட்டு உழைத்ததை எங்கேயோ இருந்து வந்த ஒருவன் அள்ளிக் கொண்டு போகிறான் என்பது வேதனைக்குரியது. ஆனால், அதே காரியத்தை அந்த அண்ணனும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதனால் தான் இந்தச் சிறுகதைக்கு "முடிவிலிகள்" என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இலக்கியா - 30.3.2003


-----------------------------------------------------------------

 

இலக்கியா!

உங்கள் கருத்துக்கு நன்றி. முடிவிலிகள் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் உள்ளது. அப்படியொரு தலைப்பைத்தான் தேடினேன். நினைவுக்கு எட்டாததால் விட்டு விட்டேன். தந்துதவியதற்கு நன்றி. அதன் தலைப்பை - முடிவிலிகள் - என்றே மாற்றி விடுகிறேன்.

சந்திரவதனா - 31.3.2003


--------------------------------------------------------------------

 

சிறுகதை சுப்பெர்

சஜிதரா - 1.4.2003


-------------------------------------------------------------------

 

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு