தாலாட்டும் காற்றே வா..!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெண்பனிப் போர்வை. வெண்மை வெண்மை. மனதை அள்ளிச் செல்லும் தண்மை.

பனிப்பூத்த நகரத்துள் தானும் பனி போர்த்தியிருந்த மொஸ்பாஹ் பல்கலைக்கழகம் (Mosbach University) வழமை போலவே படிப்பும் பாட்டும் சிரிப்பும் கும்மாளமும் என்று கலகலத்துக் கொண்டிருந்தது. என் மனமோ என் மேல் வீசிச் சென்ற தென்றலின் சுகந்தத்தை நுகர்ந்து கொண்டே இருந்தது.
திரும்பி வருமா அந்தத் தென்றல்...? இந்தப் பனிக்குவியல்கள் தராத சில்லிப்பை எனக்குத் தந்த அந்த பனிப் பார்வை மீண்டும் எனக்குக் கிடைக்குமா...? கைகள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாலும் மனசு அலை பாய்ந்து கொண்டே இருந்தது.

டிசம்பர் ஓராம் திகதி என்றதும் யேர்மனியின் அனேகமான எல்லா நகரங்களிலும் கிறிஸ்மஸ் சந்தை களை கட்டத் தொடங்கி விடும். மொஸ்பாஹ் நகரமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐரோப்பியாவின் பல பாகங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து வீதியோரங்களில் பல வகையான கடைகள் போடுவார்கள். காலுறைகள், கம்பளிச்சட்டைகள் என்று தொடங்கி ஆசிய நாட்டுச் சிலைகள் வரை பல விதமான பொருட்கள் இங்கு விற்கப்படும். கிறிஸ்மஸ் பரிசுப்பொருட்களை பெரும்பாலானவர்கள் இந்தக் கிறிஸ்மஸ்சந்தையில்தான் வாங்கிக் கொள்வார்கள். அது மட்டுமா சுவையான சிற்றுண்டிகள் துருக்கிய கேப்பாப், சீனாறைஸ், இத்தாலிய ஸ்பெஷல்.... என்று பல வகையான உணவுகளுக்கு மத்தியில் இனிப்புத் தோய்த்து வறுத்தெடுத்த மொறுமொறுவென்ற பாதாம்பருப்பு, ஆவி பறக்கும் க்ளு வைன்.... எல்லாமே இங்கு கிடைக்கும்.

கடந்தவாரமும் இதே போல் பனியினதும் குளிரினதும் ஆக்கிரமிப்புத்தான். மொஸ்பாஹ் பல்கலைக்கழகத்தின் கலகலப்புக்கு நேரெதிராக மொஸ்பாஹ் நகரம் எப்போதும் கலகலப்பின்றியே இருக்கும். அதுவும் இப்படியான குளிர் நேரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதனால் போன வெள்ளியும் மதிய இடைவேளையின் போது கிறிஸ்மஸ் சந்தைக்குப் போய் வரத் தீர்மானித்தோம். கிறிஸ்மஸ் சந்தையில் ஏதாவது வித்தியாசமாகச் சாப்பிடலாம் என்பதால் அன்று கன்ரீனில் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டோம்.

பல்கலைக்கழகத்திலிருந்து கிறிஸ்மஸ் சந்தை இருக்குமிடத்துக்கான தூரம் அதிகமில்லை. நடந்தே போய்விடலாம். நடந்தோம். அது வரை மின்சார வெப்பமூட்டியின் செயற்கைக் கதகதப்பில் பூட்டிய அறைக்குள் இருந்து படித்து விட்டு, வெளியில் பனிக்குவியலுக்குள் புதையும் கால்களை இழுத்து இழுத்து நண்பர்களுடன் நடக்கும் போது குளிர் உறைத்தாலும் மிகவும் சந்தோசமாக இருந்தது. பல்கலைக்கழக வளவைத் தாண்டி வீதிக்கு ஏறியதும், பனியை வறுகி வீதியோரம் தள்ளி விடும் மோட்டார் இயந்திரம் பாரிய சத்தத்துடன் எம்மைக் கடந்து சென்றது. வீதியில் சில இடங்களில் வழுக்கின. தோமாஸ் பனிச்சறுக்கல் செய்வது போல அடிக்கடி சப்பாத்தைத் தேய்த்துக் கொண்டு அழகாக வழுக்கி வழுக்கிச் சென்றான்.

நான் ஒரு "வெள்ளை மழை பொழிகிறது.......... " பாடல் வரியை உரத்துப் பாடினேன். அலெக்சும் டானியலும் அந்த வரிகளின் உச்சரிப்பில் எந்த அகராதியிலும் இடம் பெறாத தமிழும் டொச்சும் அல்லாத அல்லது கலந்த சொற்களை உருவாக்கி என்னுடன் சேர்ந்து பாடினார்கள்.

குளிரில் உடலின் வெப்பம் ஆவியாகி பக் பக் என்று வாயிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. வீதிகள் சேறும் சகதியுமாய் இருக்க கிறிஸ்மஸ் சந்தை நீண்டிருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் சனம் நிறைந்து வழிந்தது.

முதல் கடையின் முன்னால், பெண்களும் ஆண்களுமாய் குவிந்து நின்று தமக்கு விருப்பமான படங்களைச் சொல்ல ஒரு சுவிஸ் நாட்டுக் காரன் கிளாசில் படம் வரைந்து கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.
இரண்டாவது கடையில் ஒரு சீனப் பெண் புத்தர், கிருஷ்ணர், நடராஜப்பெருமாள்.. என்று விதம் விதமான சிலைகளை அடுக்கி வைத்திருந்தாள். ஊதுபத்தி நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தது. என் முகத்தில் அல்லது என் நிறத்தில் என்னை ஆசிய நாட்டவன் என்று இனம் கண்டு கொண்ட அவள், ஒரு சிலையையாவது நான் வேண்ட மாட்டேனா... என்ற நப்பாசையில் சிலைகளை வாங்கப் போவது போல பாவனை பண்ணிக் கொண்டு அவள் கடை முன் குவிந்து நின்று சிலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருப்பவர்களையும் தாண்டி விழிகளை என் மேல் வீசினாள். நானும் மெல்லிய நட்பான சிரிப்பொன்றை உதிர்த்தபடி நகர்ந்தேன்.

அலெக்ஸ் க்குளு வைன் கடையை நோக்கி நடந்தான். 4 க்குளு வைன்கள் தரும் படி சொல்லி விட்டு எம்மைப் பார்த்து கண்சிமிட்டினான். திராட்சை இரசத்துக்குள் கறுவாவும் இன்னும் சில மூலிகைகளும் போட்டுக் காய்ச்சிய க்குளுவைனைச் சுடச் சுடத் தந்தாள் கடைக்காரப் பெண். கறுவாவின் வாசம் தூக்கலாய் இருந்தது. குளிருக்கு அது இதமாக இருந்தது. ஆனாலும் மதியம் என்றாலே வகுப்புகள் நடக்கும் போது, இமைகள் சோர மனசு நித்திரைக்காய் ஏங்கும். இது இன்னும் கொஞ்சம் கிறக்கத்தைத் தரும். அரை மனதுடன் குடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நான்கு பெண்கள் எம்மைத் தாண்டிச் சென்றார்கள். அவர்களில் ஒருத்தி எனது நிறத்தில் என் நாட்டவள் போல்......., என் மேல் பனிப் பார்வையை வீசிச் சென்றாள். மருந்துக்குக் கூட தமிழர்களைக் காண முடியாத அந்த நகரத்தில் அதுவும் இத்தனை அழகாக...... ஒரு தமிழ்ப் பெண்..... எனக்கு சப்த நாடிகளும் ஒரு கணம் அடங்கி மீண்டும் படபடக்கத் தொடங்கின.

"காண்டீ...! அவள் உன்ரை நாட்டவளோ..!" அலெக்ஸ் அவசரமாய் டொச்சில் கேட்டான்.

"அப்பிடித்தான் இருக்கோணும்..........!"

"அப்ப போய்க் கதையன். பாத்துக் கொண்டு நிக்கிறாய்....?!" என்னைத் திட்டினான்.

அவளும் "வந்து கதையேன்" என்பது போல திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக் கொண்டு நடந்தாள்.

"போடா....." போய்க் கதைக்கும் படி டானியல் என்னைத் தள்ளினான்.

போனேன்.
"வணக்கம்" என்றேன்.

"ஹாய்" என்றாள். தேன் மதுரக் குரலில்..... கிறங்கிப் போனேன்.

"நீங்கள் தமிழா......? சிறீலங்கனா.....?" டொச்சில் கேட்டேன்.

"இல்லை...... இந்தியன்" டொச்சில் பதில் தந்தாள்.

தமிழச்சியாக இருந்து கொண்டு சும்மா இந்தியன் என்று சொல்கிறாள் போலவே தெரிந்தது. ஆனாலும் எனக்கு சற்று ஏமாற்றமானது. மேற்கொண்டு எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. "சூஸ்" சொல்லி விடைபெற்று விட்டேன்.

அன்று முழுக்க தோமாசும், அலெக்சும் டானியலும் என்னை திட்டிக் கொண்டே இருந்தார்கள். "தமிழ்ப் பெட்டைதானே அவள். பிறகேன் அவளைக் கண்டனி... சரியாக கதைக்காமல் பயந்தாங்கொள்ளி போலை வந்திட்டாய்..! எங்களோடை எண்டால் வளவளா எண்டு எத்தினை பகிடி விட்டுக் கொண்டிருப்பாய். உன்ரை நாட்டுக் காரியோடை..... இன்னும் கொஞ்சம் கூடக் கதைச்சிருக்கலாம்தானே..!"

நேரே சந்தித்த தேவதையுடன் பேசமுடியாமல் எதுவோ தடுத்ததில் நானே மனம் நொந்து வருந்திக் கொண்டிருக்க..... இவங்கள் வேறை....! அவள் வேறை - தான் இந்தியன் - என்று சொல்லிப் போட்டுப் போட்டாள்.

அன்று வெள்ளியென்பதால் மாலை வகுப்புக்கள் முடிந்ததும் எனது அறைக்குப் போய் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டேன். ஏறக்குறைய 90 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தால்தான் வீட்டை அடையலாம். கார் ரேடியோவை அழுத்தி விட்டு பாடல்களைக் கேட்ட படி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். வழியெல்லாம் அவள் நினைவுதான். தூறல் போல் இருந்த பனி நன்றாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. கார் இருளை மட்டுமல்லாமல் பனியையும் கிழித்துக் கொண்டு சென்றது. கார் கண்ணாடியில் பனி, பூப்போல வந்து முத்தமிட்டு ஒரு கவிதை போல அழகாக விரிந்து விரிந்து பறந்து கொண்டிருந்தது. பனியின் நளினம் இரவின் அமைதி இவைகளின் மத்தியில் அவளின் நினைவு என்னை எங்கோ கொண்டு சென்று கொண்டிருந்தது. ரம்மியமான உணர்வுகளுடன் வீட்டை அடைந்தேன.

சாப்பிடும் போது அம்மா என்னில் ஏதோ வித்தியாசம் கண்டு
"என்ன நடந்தது?" என்று கேட்டா.

அவளைச் சந்தித்தது பற்றிச் சொல்லி...... "அப்படியொரு அழகான பெண்ணை இதுவரை காணவில்லை." என்றேன்.

"அவளுக்கு என்ன பெயர்? என்ன படிக்கிறாள்?........" அம்மா கேள்விகளை அடுக்கினா.

"பெயரையே நான் கேட்கவில்லை." என்ற போது, அம்மா சிரித்து விட்டு, "பெயரே தெரியாமல் நல்ல காதல்தான். அடுத்த முறை சந்தித்தால் விபரம் கேள்." என்றா.

ம்...ம்...ம்...... இனி எங்கை அவளைச் சந்திக்கிறது..? அவள் வாழ்வது மொஸ்பாஹ் நகரில் இல்லை என்பது நிட்சயம். அவள் அங்கு வாழ்ந்திருந்தால் இந்த மூன்று வருட பல்கலைக் கழக வாழ்வில் என்றாவது ஒருநாளாவது அவளைச் சந்திந்திருப்பேன். அவள் கிறிஸ்மஸைச் சாட்டிக் கொண்டு நண்பிகளுடன் வெளிக்கிட்டு இந்த கிறிஸ்மஸ் சந்தைக்கு வந்திருக்கிறாள்...! இனி அவள் இங்கு வர வேண்டிய தேவை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மனசு நம்பிக்கையைத் தொலைத்துக் கொண்டு, நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. லெக்சரர் போன பின்னும் நினைவுகளில் மூழ்கிய படி அப்படியே இருந்தேன்.

"என்னடா கனவு காணுறாய். வா இண்டையோடை கிறிஸ்மஸ் சந்தை கலைஞ்சிடும். கடைசித் தடவையா போட்டு வருவம். " தோமஸ் வலிந்திழுத்தான்.

"சரி..."
புறப்பட்டோம். இந்த வருடம் வழமைக்கு மாறாக கிறிஸ்மஸ் நேரம் பனி குவிந்து போய் இருந்தது. பாடிக் கொண்டே சென்றோம். என்னையறியாமலே என் மனசு "தாலாட்டும் காற்றே வா...." என்று அடி எடுத்துக் கொடுத்தது.

சுவிஸ் காரனின் கிளாஸ் கடை ஆட்கள் இன்றி அமைதியாக இருந்தது. சீனப்பெண் சிலைகளை பெட்டிகளில் அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். க்குளு வைன் கடையைத் தாண்டும் போது "ஹேய்" என்ற சத்தம் கேட்டது. நான் என் பாட்டில் நடந்தேன். மீண்டும் "ஹேய்.. ஹேய்" சத்தம் கேட்டது. திரும்பினேன்.

எதிரேயிருந்த கேப்பாப் கடைத் துருக்கியன் என்னை வரும்படி கையால் சைகை செய்தான்.

"இவன் ஏன் என்னைக் கூப்பிடுறான்?! தட்டிப் போட்டுதோ!?" நினைத்தபடி பேசாமல் நடந்தேன். அவன் மீண்டும் கூப்பிட்டான்.

"சரி.. என்ன இழவோ? - பொறுங்கோடா வாறன்."
நண்பர்களுக்குச் சொல்லி விட்டு அவனிடம் போனேன். அவன் ஒரு மடிக்கப் பட்ட கடிதத்தை என்னிடம் நீட்டினான். "அண்டைக்கு நீ இதிலை ஒரு இந்தியப் பெண்ணோடை கதைச்சியே!. அவள் அடுத்த நாள் இங்கை வந்து, நீ வந்தால், இதை உன்னட்டைக் குடுக்கச் சொல்லித் தந்தவள்." என்றான்.
ஓரு தரம் எனக்குள் மின்சாரம் தாக்கியது போன்ற இன்ப அதிர்ச்சி. "நன்றி"சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்தேன். அவளது தொலைபேசி இலக்கம் அதில் எழுதப் பட்டிருந்தது.

என்னால் என்னையே நம்ப முடியவில்லை. எப்படி இப்படியொரு அதிசயம் நடந்திருக்கும்!! மனசு வியந்தது. நான் ஒரு மணி நேரம் கழித்து வந்திருந்தால் கூட இந்த கிறிஸ்மஸ் சந்தை கலைந்து இந்தத் துருக்கியன் எங்கோ சென்றிருப்பான். அவனை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பே எனக்குக் கிடைத்திருக்காது.

அப்படியிருக்க...........!

வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த பரவசத்துடன் தொலைபேசி இலக்கத்தை நான் எனது பொக்கற்றினுள் மிகவும் கவனமாகப் பத்திரப் படுத்திக் கொண்டேன்.

திலீபன்
யேர்மனி

Dec-2002

பிரசுரம் - ஈழமுரசு(மார்கழி 2002)

Post a Comment

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு