“உனக்குத் தெரியுமோ குதிரைச்சவாரி சரியான இதமானது. இன்பமானது. அந்தப் பொழுதுகளில் நான் இனியில்லை எண்ட அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பன்“ மிருகங்களைத் தூர இருந்து இரசிப்பதில் மட்டுமே விருப்பமுடைய எனக்கு அன்ரோனெலாவின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது. அவள் கண்களை மூடிச் சுகித்த படி தொடர்ந்தாள் “குதிரைக்குக் குளிக்க வார்க்கிற பொழுது ஒரு வாசம் வருமே! அது மிக மிகச் சுகமானது“ மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது வருகிற வாசம் பிடிக்குதாம். “நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“ “உண்மையாகத்தான் சொல்லுறியோ?“ நம்ப முடியாது கேட்டேன். “ஓம் உண்மை“ “ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ? “ஓம் மண்டியிடும். அது ஒரு ஆனந்தமான பொழுது.“ எனக்கு அது ஆச்சரியமான பொழுது. மனசுக்குள் அவளை விசித்திரமாக உணர்ந்தேன். அன்ரோனெலா இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி ஒருவரின் காரியதரிசி. யேர்மனிய மொழியை மிகச் சரளமாகப் பேசக் கூடியவள். அவளது முகத்தைப் பார்க்காமல் தொலைபேசியில் பேசும் எவரும் அவளை இத்தாலி நாட்டவள் என்று கண்டு பிடிக்க மாட்டார்கள். அத்தனை நேர்த்தியாக யேர்மனிய மொழியை உச்சரிப்பாள். நேரே பார்த்தால் மட்டும் ஏதோ ஒன்று அவள் யேர்மனியைச் சேர்ந்தவள் அல்ல என்று காட்டிக் கொடுத்து விடும். அழகானவள். ஆனால் குள்ளமானவள். Read more
எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.
எங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ? Read More